Sunday, August 6, 2017

தவற விட்ட உரையும் 47வது இலக்கிய சந்திப்பும் (மலையகம்)


சென்ற முறை கிழக்கில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது என்று முஸ்டீன் அங்கலாய்த்துக்கொண்டிருந்த போது மீண்டும் இலங்கையில் நடக்குமாயின் கட்டாயம் கலந்து கொள்ளனும் என்றார்.மலையக இலக்கிய சந்திப்பு நடைபெற போவது குறித்து முகநூலினூடே அறியக்கிடைத்தது.

பெண்ணிய அரங்கில் பேசுகின்றீர்களா என லறீனா ராத்தா கேட்டதற்கிணங்க நானும் முன்னாள் போராளிப் பெண்களின் படைப்பிலக்கியங்கள் குறித்து பேசலாம் என்றேன். ஒரு வாரத்தின் பின்னர் திலகர் அண்ணா தலைப்பு தொடர்பில் உறுதிப்படுத்திக்கொண்டார். ஆய்வுக்கட்டுரையின் Soft Copy தேவைப்படுமா? கோவையாக போடும்P எண்ணம் உள்ளதா என்பதனை தெரிந்து கொள்ள லறீனா ராத்தாவை தொடர்பு கொள்ள முடியாமல் போகவே லுனுகல சிறியிடம் கேட்ட போது இல்லை என்பதை குறிப்பிட்டார்.

சர்மிளா ஷெய்த்திடம்  தொலைபேசியில்  இலக்கிய சந்திப்புக்கு வருவியா என கேட்ட போது ஏற்கனவே அதற்குள் பிரச்சினையாம் இதில நான் எங்க போறது என்று குறிப்பிட்டார்.அப்போது தான் கத்னா உரையினால் உண்டான  இலக்கிய சந்திப்பு உட்பூசல் தெரிய வந்தது.ஆனால் லறீனா ராத்தா எதுவுமே தெரியாதவர் போன்று கடைசி வரை இருந்துவிட்டார்.இது குறித்து விசாரித்த போதும்  சரி ஆரம்பத்தில் அரங்குகள் குறித்து கேட்ட போதிலும் சரி எதுவுமே கூறவில்லை.அது அவரின் குழுஒருமைப்பாட்டினைக் காட்டுகின்றது என்றே நினைக்கிறேன்.வெளியேற்றம் குறித்து கேட்ட போதும் அப்படி எதுவும் நடக்காத மாதிரி சமாளித்து விட்டார்.ஒருவேலை நான் கலந்து கொள்ளாமல் விட்டுவிடுவேனோ என்று மறைத்தாரோ தெரியவில்லை.இது இவ்வாறிருக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான தயார்படுத்தல்களை ஒரு மாதத்திற்கு முன்பே  செய்து விட்டிருந்தேன் புகையிரத பயணச்சீட்டிற்கான வரன்ட் எடுத்து லுனுகல ஸ்ரீயின் மகளுக்கு கிப்Ft வாங்கி வைத்து உரைக்கு தேவையான நூல்களினை வெற்றிச்செல்வி,மிதயா கானவி ஆகியோரிடம் அனுப்ப சொல்லியும் சில நூல்களினை ஹேமச்சந்திர பத்திரன அவர்களிடமிருந்தும் பெற்று தொடர்ச்சி யான வாசிப்பில் மூழ்கியிருந்தேன்.

முகநூல் தொடர்பு குறைவு என்பதனால் பனிப்போர், சூறாவளி, காட்டுத்தீ போன்றவை என்னை தீண்டுவதில்லை..நிகழ்ச்சியிற்கு முந்திய தினம் கணவர் ,குழந்தையுடன் வருவேன் தங்குமிடம் தேவை என்பதனை திலகர் அண்ணாவிடம் தெரிவித்திருந்தேன்.ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால்  குறிப்பிட்ட தினத்தில் என்னை அழைத்துச் செல்ல முஸ்டீன் வரவில்லை.இருந்த போதும் இறுதி நேரம் வரை ஆயத்தமாகவே இருந்தேன்.கொழும்பிலிருந்து செல்பவர்களுடன் சேர்ந்து செல்லலாம் ஆனால் என் சின்ன வான்டா தனியாய் சமாளிக்க முடியாது என்பதனால் முஸ்டீன் வந்து அழைத்துச்செல்லும் வரை காத்திருந்தேன்.இருந்தும் என்னால் கலந்து கொள்ள முடியாமல் போனமை முஸ்டீன் மீது ஆத்திரத்தினை உண்டு பண்ணி ஊடலில் முடிந்தது.காரணம் வெற்றிச் செல்வி பல சிரமத்திற்கு மத்தியிலும் தன்னுடைய அத்தனை நூல்களையும் யாழிலிருந்து கொழும்பு வரும் பேரூந்தில் அனுப்பி வைத்திருந்தமையும் ஏனைய கற்றல் விடயங்களை தவிர்த்து தொடர்ச்சியான வாசிப்பிலிருந்தமையினாலுமாகும்.

முஸ்லிம் உறுப்பினர்களின் கதைகளை கேட்டு நான் பங்கு பெறவில்லை என பேச்சடிபட்டதாக அறிந்தேன்.அந்த முஸ்லிம் உறுப்பினர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த காக்கா தம்பிமார் மூன்று பேருடனோ றியாஸ் குரானாவுடனோ குறைந்தது முகநூல் தொடர்பேனும் எங்களுக்கில்லை.மிகுதி ஒரே ஆள் லறீனா. இலக்கிய சந்திப்பு தொடர்பான முதல்  கலந்துரையாடல் அவருடைய இல்லத்தில் நடை பெறுவதற்கு முந்திய தினம் என்னுடைய வீட்டிலிருந்தே அவசரஅவசரமாக புறப்பட்டுச் சென்றார்.எதிர்பார்த்திராத விதமாக நோன்பு தலைப்பிறை தென்பட்டதனால் நான் போகவேண்டாம் என தடுத்தும் இல்லை நாளை சமைக்க வேனும் நான் போகவே வேண்டும் என பிடிவாதமாக சென்றார்.இங்கு முக்கியமான விடயம் என்னவெனில் என்னையோ அல்லது நிகழ்வில் பங்குகொள்ள இருந்த யாரையும் போக  வேண்டாம் என்று சொல்லுமளவு லறீனா அற்பத்தனமானவரும் அல்ல பிழையான அறிவுறுத்தல்களை தொடருமளவுக்கு நாங்களுமில்ல.இறைவன் அந்த உரையினை நாடவில்லை என்றே நான் நினைக்கிறேன்.,

இவை எல்லாவ ற்றையும் தான்டி நேற்று குழும மின்னஞ்சல்களை பார்க்க நேரிட்டது அதில் பெண்ணிய அரங்கில் நான் கலந்து கொள்வதனால் எபியெம் இத்ரீசுக்கு அசௌகரியம் இருப்பதாகவும் அதனால் அவ்வரங்கில் இருந்து அவரின் பெயரை நீக்கி விடும்படி இத்ரீசின் தம்பி இம்தாத் பண்ணிய மெய்லைப் படிக்கக் கிடைத்தது. "அவ்வரங்கில் நான் தன்னினச் சேர்க்கையாளர்கள் குறித்தோ அல்லது அமெரிக்க உலக யூதர் ஒன்றியத்தின் நிதியுதவியில் இயங்கும் ஈக்குவல் கிரவுன்டின் வளவாளர்கள் குறித்தோ அல்லது ஜாமியா நளீமியாவின் விரிவுரையாளர் தரத்திலிருந்து அவரை நீக்குவதற்கு நளீமிய நிருவாகம் எடுத்த முன்னெடுப்புகள் குறித்தோ நான் பேச இருக்கவில்லையே.."முன்னாள் போராளிப் பெண்களின் படைப்பிலக்கியங்களில் மேலோங்கியிருக்கும் பெண்ணியக்கருத்துக்க ள்" பற்றி தானே பேச இருந்தன் பின்னர் ஏன் அவருக்கு சங்கடம் ஏற்பட வேண்டும்? அவருக்கு நிகழ்வில் பங்கு கொள்ள வேறு காரணம் சொல்ல முடியாததற்கு இவ்வாறு சொன்னதாகவும் பூசி மெழுகப்பட்டது.பெண்களுக்கான (தாய்,சகோதரி) உரிமைகள் மறுக்கப்பட்ட வீட்டிலிருந்து ஓர் ஆண் பெண்ணியம் பேச எத்தனிக்கின்ற போது அவ்வரங்கில் பேச எனக்குத்தான் அவமானம்.

வேணாம் வாயக்கிளற. 

இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
நன்றி
வணக்கம்.

Friday, June 2, 2017

பேன் சிந்தனை

செயற்றிட்டம் கருத்தரங்கு
கலந்துரையாடல் விளக்கம்
சிந்தனை ஆலோசனை
எதற்கும் வாய்ப்பு வழங்காமல்
முழு நாளை ஒட்டு மொத்தமாக ஆக்கிரமித்திருந்தன
ஈரு..ஒட்டு..பேன்..

அன்றைய நாளின் தலையிடி
தலைக்கடியாய் அமைந்து போயிற்று அவர்களுக்கு
பெண்ணிய சிந்தனை பற்றிய
கருத்து வெளிப்பாடு
தலைவாருதலையும் சீப்பையும்
குறித்தே அமைந்ததாயிற்று

இந்த பேன் தொல்லைக்கு
மருந்து கட்டியாகனும்
முடியை விரித்துப்போட்டு
தலைக்கடி தீர
சொறிய வேண்டும்
பேன் சீப்பால் வார வேண்டும்
போன்ற சிந்தனையை தவிர
மற்றயவற்றை
சொறிச்சல் கட்டியாண்டது

எப்போது  வீடு போய்ச் சேருவோம்
என்ற வினாவினை
மூளைக்கு பேன் கொடுத்து
கடியை உண்டாக்கி
சுதந்திரமாக மயிரூடே
அழைந்து திரிந்தது.

சபையில்
கடி தீர
தலையைச் சொறியவும்
பேனை எடுத்து
குத்தவும் முடியாமல் அன்றைய பொழுது கழிந்தது

தலையை வெட்டி
மடியில் வைத்து
பேன் பார்க்கும் நம் சமுதாய சிந்தனை சிற்பிகளை என்னவென்பது?
மலத்தியன்பவுடரைக் குழைத்து
தலையில் தேய்த்தாலும் கடி அடங்காது.

Sunday, April 23, 2017

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மதன்

அன்று 23.01.2017 திருவானந்தபுரம் போத்தீஸ் ஜவுளிக்கடலில்....

என்னுடன் வந்த நண்பர்கள் மேல் தளத்திற்கு சென்றிருந்தனர்.ஒவ்வொரு தளத்திலும் பொருட்களை கொள்வனவு செய்து விட்டு பில்கொடுப்பனவு செய்த என்னிடம் இந்திய ரூபாய்கள் போதாமையாக இருந்ததனால் அமெரிக்க டொலரினை மாற்றலாம் என நினைத்து டொலர் ஒன்றின் இந்திய மதிப்பினை கேட்டேன் 60 ரூபாய் என்றார்.நானும் அன்றைய தினத்தில் டொலர் ஒன்றின் இந்திய பெறுமதியைப்பார்த்தேன் 68 ரூபாய் என்றிருந்தது எனவே மேல் தளத்தில் நின்ற நண்பனுக்கு கோல் செய்தேன் கொஞ்சம் மூன்றாவது தளத்திற்கு வரமுடியுமா எனக்கேட்டுக்கொண்டே தானியங்கி படியில் (எஸ்கிலேட்டரில்)4 வது தளத்திற்கு வந்துவிட்டேன்.

அப்போது அவன் கலவரப்பட்டவனாக அவசரமாக எஸ்கிலேட்டரில் ஓடினான்.நான் பெயரைச்சொல்லி அழைத்தேன்.உடனே அவன் அதே தானியங்கியில் மீண்டும் மேல் நோக்கி வந்தான்.மிகவும் பதட்டமடைந்திருந்தான்.வியர்த்துக்கொட்டியது அவனுக்கு "ஏன் இவ்வளவு அவசரமாய் ஓடி வந்த?" எனக்கேட்ட போது "இல்ல உனக்கு ஏதும் பிரச்சினையோ இல்ல ஏதும் நடந்திட்டோ என பதறிட்டன்"என்றான்.

என் சகோதரன் கூட எனக்காக பதறியதில்லையே என்ற ஏக்கம் வர சுதாரித்துக்கொண்டு  கரன்சி மேட்டரை கூறினேன்.ஓஹ் இதுதானா? என்று கேட்டதிலிருந்து புரிந்தது அவன் எத்துணை பதறிப்போய் இருப்பான் என்பது.எல்லோருக்கும் எல்லாம் வாய்ப்பதில்லை.அந்த சம்பவத்திற்கு பின் அவன் நட்பை நினைத்து பெருமைப்படுகிறேன். கடந்த 20 வருடங்களில் நல்ல நண்பனாக சகோதரனாக நலன்விரும்பியாக பயணிக்கும் அவனுக்கு இன்றைய பிறந்த தினத்தில் வாழ்த்துக்கள் கூறுவதில் புலங்காகிதமடைகிறேன்.

Wednesday, March 29, 2017

வீணாச்சிப்பழக் கனவு - 01

முகநூல் எழுத்துக்கள்

முகநூல் எழுத்துக்களில் லைக் ,செயார் பின்னூட்டம் போன்றன குறித்து  ஆரோக்கியமான கலந்துரையாடலின் தேவையை முகநூல் எழுத்துக்கள் தோற்றுவித்துள்ளன.காலத்திற்கு ஏற்ற வண்ணம் தான் எழுத்தும் கருத்தும் அமைந்துவிட்டதனால் எழுத்திலிருந்த கலாசாரம் விழுமியம் போன்றன விடுபட்டு இல்லை பின்தள்ளப்பட்டு குழாயடிச்சண்டைகள் மிகச்சர்வசாதாரணமாக முகநூல் எழுத்துக்களை கட்டியாள்கிறது.

அச்சியந்திரத்தின் வருகைக்கு முன் எழுத்து பிரக்ஞை பூர்வமானது.காட்டாறு வெள்ளம் போல தான் சொல்ல வந்த விடயத்தை எந்தவித உள்குத்தும் இன்றி அழகிய முறையில் சொல்லிச்சென்றனர்.அச்சியந்திரத்தின் வருகையின் பின் நம்நாட்டினை பொருத்தவரை காலணித்துவ ஆட்சியின் தாக்கம் இருந்ததனால் எழுத்துக்கள் விடுதலை சுதந்திரம் சமத்துவம் போன்ற எண்ணக்கருக்களை யாரையும் சாடாமல் நேரடியாக வெளிப்படுத்தினர். போர்க்காலத்து இலக்கிய எழுத்து அச்சம்மிகுந்திருந்த அதேவேலை தமது எதிர்ப்பை பதிவு செய்யக்கூடியதாகவும் தமது இருப்பியலை  மிகத்தத்ரூபமாக வெளிக்காட்டக்கூடியதாவிருந்தது.

சமூக வலைத்தள எழுத்துக்களினூடாக பல்லாயிரக்கணக்கான எழுத்தாற்றல் மிக்கோர் வெளிக்கொணரப்பட்டுள்ளனர்.முன்பு ஒரு செய்தியையோ கதையையோ  பத்திரிகைக்கு அனுப்பி விட்டு பிரசுரமானதா?என இழவு காத்த கிளி போல இருந்த காலம் மாறி மனதில் என்ன நினைக்கிறோமோ அதனை எழுதும் சந்தர்ப்பத்தை முகநூல் ஏற்படுத்திக்கொடுத்தது.நல்லவகையான எழுத்துகளின் பெருவாரியான தோற்றம் பலரையும் வாசகர்களாக மாற்றியது.அதே போன்று
ஒரு பிரச்சனையை பதிவு செய்யும் பொழுதும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் போதும் தான் கொண்ட நிலைப்பாட்டினை குரோதம் நிறைந்த எழுத்துக்களால் வெளிப்படுத்துதல் என்ற நிலையினை முகநூல் எழுத்துக்கள் தோற்றுவித்துள்ளன.விழுமியம் புறக்கணிக்கப்பட்டு குரோதம் தலைவிரித்தாடுவதனால் முகநூல் எழுத்தாளர்கள் ஆன்மீகப்பயிற்சியற்றவர்களோ என்ற சந்தேகத்தினை உருவாக்கும் விதமான எழுத்துக்கள் வாசிக்க கிடைக்கவும் செய்கின்றன.

சங்க காலத்தில் காதலி பெயர் கூறி இன்புறும் ஒரு தலைக்காமம் போன்று தற்கால முகநூல் எழுத்துக்கள் தனக்கு விருப்பமானதை இன்னொருவரும் ஏற்றுக்கொண்டார் என்ற பொருந்தாக்காமத்தினை வலிந்து கூறி முன்வைக்கிறது.காழ்புணர்ச்சி தலைக்கேறிவிட்டதன் வெளிப்பாடு இலக்கியங்களை குறியீடு, படிமம்,கரு போன்றன இன்றி வெளிவருகிறது.

Tuesday, March 21, 2017

விமர்சனங்களூடே...

அவளை விமர்சிப்பதாக
இவள் சொன்னாள்
அவர்கள்
இலக்கிய விமர்சகரல்ல
ஆய்வாளர்களல்ல
அயலவர்களுமல்ல
இவளைப்பற்றி அவனிடமும்
இவனைப்பற்றி அவளிடமும்
அந்த அறையிலிருந்த
வண்ணம் கதைப்பவர்கள்
கல்வி புகட்டுவதை
தொழிலாய்க்கொண்டவர்கள்

காலக்கொடுமை
அவர்களால் போதிக்கப்படும்
எதிர்கால கல்விச்சமூகம்
இம்மையில்
மனிதர்களால்
கேள்விக்குட்படுத்தப்படும்
மறுமையில்
இறைவனிடம் பதிலளிப்பார்கள்

இவள்
கற்களை கொத்திப்பிரட்டி
சமப்படுத்தியும்
முட்களை அகற்றியும்
பாதைகளை
செப்பனிடுகிறாள்
குழிகளை நிரப்ப அதிகநாட்கள் எடுக்கும்
ஆனாலும் அவள் பாதை அழகானது
நித்தியமானது
யாரும் தடுமாறியேனும் விழமாட்டார்கள்..
அதுவரை விமர்சனங்களூடே பயணித்துக்கொண்டிருப்பாள்

Sunday, March 19, 2017

இடிபாடுகளுக்குள் சிக்குண்ட கவிதை- 07

வாசிக்கப்படாத கவிதையிடம்
வாசிக்கப்படாத புத்தகங்கள்
அதிகரித்து விட்டன
யார் யாரோ தந்து விட்டுப்போனதும்
தினித்துவிட்டுப்போனதும்
அடுக்கப்படவில்லை

அடுக்கியிருப்பதெல்லாம் வாசிக்கப்பட வேண்டியவை
புரிதலுக்கும்
விட்டுக்கொடுப்பிற்கும் இடையே
இந்தக் கவிதைப்புத்தகத்தை
செருகிவிட்டுச் சென்றார்கள்

அவன் வாசிக்க மறந்த நாவல்
மேசை மீது நீண்டநாட்கள்
விரித்துக்கிடக்கையில்
இடைச்செருகல் எவ்விதம் கண்ணில்படும்??
அவனுக்கு பிடித்ததெல்லாம்
அமானுஷ்யம் மட்டுமே

Saturday, March 11, 2017

கவிதை எழுத்து

பெண்ணுட லையும் மூடியிருக்கும்  முலைகளையும் யோனியையும் அதன்
உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துதல் கவிதை வியாபாரம் எனில்
கடையை சீல் வைத்து மூடவே விரும்புகிறேன்

பாவம் அவர்கள் பேசப்படவேண்டியவர்கள்
என்னையும் என்னாடையையும் விமர்சிப்பவர்களுக்கு
நான்
ஒருபாட்டுடையாள்
கம்பனும் ஒரே ஒரு பாடலில் தான் சத்துருக்கனை பாடினான்
ஆயிரம் பாடல்களில் பாடப்பட்ட இராவணனை மாற்றுக்கருத்துடையோர் கொண்டாடுவதை தவிர்க்வியலாது
கவிதை உலகிற்கு மறைத்தலே சிறந்தது

மௌனத்தை கலைத்து
விரதத்தை உடைத்து
சமயத்தை அடகுவைத்து
சாக்கடைகளை எழுத்தில் கொண்டுவரவேண்டிய தேவையை ஒருக்காலும் உணரப்போவதில்லை
ஒழுக்கமற்ற எழுத்துக்களை யார்தான் விருப்போகின்றனர்?விரும்புபவர் குறித்தும் கவலையில்லை
மருந்து குடித்தால் குணமாகிடும் வருத்தமல்லவே எழுத்து.