Thursday, March 22, 2012

தனித்திருந்து காத்திருத்தல்



இது ஒன்றும் 
எனக்கு புதிதல்ல 
அதில் -
எத்தனை சுகம் 
என்பதுவும் 
நான் அறியாததல்ல 

என்னில் -நீ 
காண்பது 
வலிகளல்ல...
உன்னை காணாத 
வழிகளில்- என் 
விழிகளல்ல 

நித்தமும் 
காலடிச் சத்தம் 
கேட்பெதென்ன?
திரும்பும் 
போதெல்லாம் 
நிசப்தமென்ன ?

தனித்திருத்தல் 
பற்றி நீயும் 
காத்திருத்தல் 
பற்றி நானும் 
ஆய்வு செய்வோம் 

எங்காவது 
எனது  கேள்விகளுக்கு 
உனது ஆய்வில் 
விடை கிடைக்கும் 




Thursday, March 15, 2012

முன்னுரை

நான் கவிதை எழுதுகிறேன் என்பதை விட என் உணர்வுகளை வெளிப்படுத்துகிறேன் என்பது தான் உண்மை .என் கவிகளுக்கு காலச் சூழலும் மனித நடவடிக்கைகளுமே களம் அமைத்தவை. இந்த வலைப்பூவில் என் முகவரி
தொலைக்கப்படும் என்பதற்காக எழுதியும் எழுதப்படாத கவிதைகள் இடம் பெறவில்லை. அவ்வப்போது எழுத நினைத்தாலும் ஏதோ ஒன்று ஆட்கொள்வதனால் என் உள்ளம் அமைதி பெறும்.
மனதில் உள்ள விடயங்களை வெளிப்படுத்தத் சிறந்த ஊடகம் தான் இலக்கியம்.
அதன் வடிவமான கவிதை படிப்பதற்கும் எழுதுவதற்கும் இதமானது. எல்லோராலும் எல்லா விடயங்களையும் புரிந்து கொள்ளல் முடியாது. சிலவற்றை சொல்லலாம் சிலவற்றை சொல்ல முடியாது. சொல்லித்தான் ஆக  வேண்டும் என்று இருந்தால் பொறுமையாக இருந்து தான் ஆக வேண்டும்.

Monday, March 12, 2012

புரியாமலே...

நம் கவிதை
எழுதப்படுகிறது
உன்னால்
புரிந்து கொள்ளப்படும்
என்ற நம்பிக்கை அல்ல
புரியா விட்டாலும்
எழுதப்பட வேண்டியது
காட்டாயம் என்பதால்

உனக்கான என்னை
என்றும்
எப்போதும்
தயார் படுத்துவது
உண்மை ......
ஆனாலும்
காலம்
விட்டு வைக்குமா
தெரியவில்லை?

என்னால்
புரியப்பட்ட நீ
என்னை புரிந்து 
கொள்ளாமல்
போவதன் மாயை
மட்டும்
இன்னும் புரியவில்லை .

Saturday, March 3, 2012

தொலைவில் ........




என்னை எனக்கே 
உணர்த்திய தலைவன் 
நீ .......
உன்னால் தான் 
காதலிக்க 
கற்றுக்கொண்டேன் .....
கூடவே 
நடக்க முடியாததை 
கனவு காணவும் ...
 
காலம் பதில் 
சொல்லட்டும் 
என்றா 
தொலை தூரம் 
சென்று விட்டாய் ?

உன்னாலே 
எல்லாம் 
உண்டானவை 
என்பதை மட்டும் 
மறந்து போனதென்ன ?

எது எப்படினாலும் 
என்னை எனக்கே 
புரிய வைத்தாய் 

உனக்காக 
வாழ்வது 
இஷ்டம் என்றாலும் 
அவ்வளவு கஷ்டமில்லை 
அதுவரை 
நான் உன் காதலி .