Friday, October 13, 2017

பிரியாணி - சிறுகதை

நீண்ட நாட்களுக்குப்பிறகு அவள் வந்திருப்பதால் ஆர்வத்துடன் சமையலில் ஈடுபட்டேன் என்னுடைய சகோதரி வந்திருப்பதான உணர்வு.மகன் உமர் காலித்திற்கு  அவள் மீதான ஈர்ப்பு இதுல தான் என்று சொல்ல முடியாதவாறு ஏதோ ஒர் இறுக்கம். வழமையாகவே யாரும் வீட்டுக்கு வந்தால் என்னுடன் ஒட்டிக்கொண்டே இருப்பான்.சமைப்பதற்கு விடமாட்டான் "தூக்கு மா ..பபாவ தூக்குமா" என்பான்.நானும் அவரை அழைத்து "குழந்தையை வைத்திருந்தால் தான் சாப்பாடு இல்லாட்டி கடையில் வாங்கி கொடுப்போம்" என்பேன்.  வந்திருப்பவர்களுடன் பேசவோ கிட்ட போகவோ மாட்டான்.ஆனால் வழக்கத்துக்கு மாறாக அன்று அவன் என் கிட்ட வரவே இல்ல.
"வாணி வாணி "என பல முறை சொல்லியவாறு ஹாலில் விளையாடிக்கொண்டிருந்தான்..
எல்லோரரையும் அன்டி"என அழைக்கும் குழந்தை அவளை பெயர் சொல்லியே அழைப்பான்.அது அவளுக்கும் பிடித்திருந்தது."மகன் அன்டி என்று சொல்லுங்க" என்ற போது "விடுங்க அவன் சொல்லட்டும் பெயர் வைக்கிறது கூப்பிடத்தானே" என்றாள்.அது அவளுக்கும் பிடித்திருந்தது என்பதனை நான் உணர்ந்து கொண்டேன்.  அவள் மீது தனிப்பிரியம் குழந்தைக்கு இருக்க காரணம் அவளின் அன்பான நடத்தைகள் தான்.பொதுவாக குழந்தைகள் அவ்வளவு சீக்கரத்தில் எல்லோரிடமும் பழகுவதில்லை.அவர்களுக்கு பிடித்திருந்தால் மாத்திரம் தான் முகத்தை பார்க்கவே செய்வார்கள்.அதற்கு குழந்தை உமர் காலித்தும் விதிவிலக்கல்ல. அவள் முதல் தடவையாக வீட்டிற்கு வந்திருந்த போது சிதறிக்கிடந்த புத்தகங்களை அடுக்கி குழந்தையின் கைகளாலே அவற்றை புத்தக ராக்கையில் அடுக்கவும் செய்திருந்தாள்.அது அவனுக்கு மிகுந்த சந்தோசத்தை அளித்திருக்க வேண்டும். தினமும் புத்தகங்களை ராக்கையிலிருந்து கீழே இழுத்துப்போடுவான் உமர்.நானும் அவன் தூங்கிய பிறகு அழகாய் அடுக்கி வைப்பேன்.திரும்பவும் இழுத்து வீசுவான் நானும் அடுக்கி வைப்பேன்.வாணி குழந்தையிடம் புத்தகங்களை கொடுத்து அடுக்கச் செய்த போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது."இந்த வேலய நாம இதுவரை செய்யலயே"என மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.அவள் செயற்பாடுகள் குழந்தையைக் கவர்ந்தது போல் என்னையும் ஈர்த்திருந்தது. அவள் மீதான பிடிப்பின் வெளிப்பாடு அன்றே அவளருகில் போய் இருந்து கொண்டான்.அதன் பிறகு வட்சப் இல் அவளை அழத்து குரல் அனுப்பியிருந்தான்.அதற்கு அவள் அனுப்பிய பதிலை எத்தனையோ முறை மீண்டும் மீண்டும் கேட்டான்.. பொதுவாக பெண்ணின் வசீகரமான இனிமையான குரல் ஆண்களைக் கவர்வது சாதாரணமானதுதான்.ஆனால் குழந்தைக்கு அவள் குரலில் இருந்த அன்பு கனிவு  ஈர்ப்புக்கு காரணமாயிற்று.

முதல் சந்திப்பிலேயே "நான் நல்லா பிரியாணி செய்வேன்"என்றது மாத்திரமல்லாது வீட்டவந்து செய்து தருவதாகவும் உத்தரவாதமளித்தாள்.அவள் வீட்டுக்கு வரும் அன்றைய தினம் பிரியாணி சமைப்பதற்கு தேவையான அனைத்துப்பொருட்களையும் வாங்கி வைத்தேன்.மிகுதிப்பொருட்களை தானே வாங்கி வருவதாக கூறியிருந்தாள்.உண்மையிலே இவளுக்கு பிரியாணி செய்யத்தெரிந்திருக்குமா என்ற சந்தேகம் எனக்கும் கணவருக்கும் இருந்தது.இது தொடர்பில் இருவரும் உரையாடிக்கொண்டோம்.ஏனெனில் திருமணமான பின்னர் தனிக்குடித்தனம் நடாத்தும் பெண்களுக்கு சமைக்கத்  தெரிந்திருக்கும் என்பது பொதுவான அபிப்பிராயம்.ஆனால் அம்மாவுடன் கூட்டுக்குடும்பத்தில் இருக்கும் வாணிக்கு சமைக்கத்தெரிந்திருக்குமோ? என சந்தேகப்படுவதில் நியாயம் இருக்கத்தான் செய்தது.அத்துடன் நீரை கொதிக்க வைக்கவும் அவித்த முட்டையை உரிக்கவும் தக்காளி வெட்டவும் தெரியும் எனும் பெண்களிடையே பிரியாணி சமைக்கவும் முடியுமென்றால் ஆச்சரியப்படுவதில் தப்பில்லை.

யாருடனும் பழகிப்பார்க்காமல் தம் விருப்பத்திற்கு கட்டுகதையை பறக்கவிடுட்டு அதில் இன்புறும் மனநிலையானது முன்பு ஊடகவியலாளர்களிடம் காணப்பட்ட பறவைக்காய்ச்சல் இப்போ இலக்கியவாதிகளுக்கும் தொற்றியிருந்தது.அந்தப்பறவைக்காய்ச்சல் பிடித்த நபர் ஒருவர் அவள் குறித்த பிழையான பிம்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்திருந்தார் அதன் வெளிப்பாடுதான் அவளைப்பற்றிய பரப்புரைகள்.

நான் பழகும் நண்பிகளின் இறந்த காலம் நிகழ் காலம் எதிர்காலம் குறித்த தேடல்கள் ஒரு போதும் என்னிடமிருந்ததிலை.ஆனால் எத்தனையோ ஆண்கள் பெண்களின் மீது அக்கறை கொண்டு விசாரிப்பதுண்டு.ஒரு முறை வீட்டுக்கு வந்த விருந்தாளி அடுக்கடுக்கான எரிச்சல் தரும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்.பொதுவாக அவள் என்று விசாரிப்பதானது உள்ளூர கோபத்தினை ஏற்படுத்தவல்லது. "அவள் சஹானா கல்யாணம் முடிச்சவள் தானே?இப்ப பிரிஞ்சிட்டாளோ?"
"தெரியாது"
"ஏன் நீங்க கேட்பதில்லையா?"
"எனக்கு தேவல்லாத கேள்வி அது எனவே கேட்பதில்லை"
"உங்கட நல்ல பிரண்டோடதானே சுத்திக்கிட்டிருக்காள்"
"..............."
"அன்டைக்கு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவங்க எல்லாரும் அவள்ட கதயத்தான் கதைச்சாக"
"..............."
"நான் கேட்ட கேள்விக்கு பதிலே இல்ல"

இதுவரை எரிச்ச லுடன் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த எனக்கு அவருக்கு ஒரு வார்த்தையில் பதில் அளித்து அந்த இடத்தை விட்டகல வேண்டும் என்று தோன்றினாலும்  வீட்டுக்கு வந்த விருந்தாளி என்ற இங்கிதத்துடன் பதிலளிக்கலானேன் "பி.எச்.டி க்கு தகவல் தேடுறீங்களோ இல்லையோ பொம்பளயல்ற பலாய் மட்டும் நல்லா தேடுறீங்கன்டு விளங்குது " என்று சிரித்து தொடர்ந்தேன் " நானா நீங்க இத மாதிரி ஏற்கனவே சாஹிராவ பத்தியும் அவள்ட கல்யாண வாழ்வ பற்றியும் கேட்டிங்க.இப்ப யாரோடும் தொடர்பா?என்டும் கேட்டீங்க.ஆனால் நீங்க விசாரித்த இவங்க இரண்டு பேரும் நல்ல எழுத்தாளர்கள்.அவங்கட புத்தகத்த வாசிச்சிட்டு அதிலுள்ள விடயங்கள கூட கலந்துரையாடலாம்.நான் கூட அவர்கள்ட எழுத்து குறித்து நிறைய பேசுவன்."இவ்விதம் நான் சொல்லிட்டு இருக்கும் போதே அவர் "இதென்னடா வாப்பா பெரிய வம்பா போச்சு உங்கட பிரன்ட் தானே தெரிஞ்சிருக்கும் என்டு கேட்டன்"
"சரி இத தெரிஞ்சு கொண்டு என்ன செய்யப்போறிங்க?உங்களுக்கு ஏதும் பிரயோசனம் இருக்கா?அவ யார கலியாணம் முடிச்சா நமக்கென்ன வந்தது?நான் தனிப்பட்ட கதைகள விசாரிப்பதில்ல.." என்று அடக்கியிருந்த கோபத்தை சற்று உயர்ந்த தொணியிலே வெளிப்படுத்தினேன்.இன்னும் நிறைய பேசத்தோனிற்று.ஆனாலும்
அந்த நேரமாக பார்த்து கணவர் வரவும் தேநீர் ஊற்றலாம் என குசினிப்பக்கம் நழுவி விட்டேன்.

இன்றைக்கு பலர் யாரென்றே தெரியாத பெண்களின் தனிப்பட்ட விடயங்களை தேடிய லைந்து அதனை சர்வதேச அரசியல் பிரச்சனையை  அலசுவது போன்றும் பிரபலமான பெண்களின் முகநூல் பக்கங்களை வாசித்து அவர்களின் நாளாந்த பதிவுகளை வாசித்துக்கொண்டு அதனைப்பற்றி வம்பளப்பதனையும் வாடிக்கையாக்கிருக்கின்றனர்.இந்த விதத்தில் தான் வாணியைப்பற்றிய கதைகளையும் காற்றிலையவிட்டிருந்தனர்.ஆனால் அவளின் நாளாந்த நடவடிக்கையில் மயிரசைவேனும் தெரியாது தமது விருப்பத்திற்கு கதைப்பவர்கள் குறித்து எனக்கு  சிரிப்பு தான் வரும்.நம்மட சோனிக்காக்காமாருக்கு யாராவது பிரபலமான பெண்களை பற்றி ஊருபலாய் கழுவாட்டி தூக்கமே வராது.அப்படி பட்ட இரு எலக்கியவாதிகள் என்னிடம் அவள் பற்றி விசாரிக்கும் போது ஒங்கியறைந்திடத்தான் தோன்றியது .

இஸ்லாமிய வரலாற்றை பார்க்கும் போது ஒரு முறை உமர் (ரலி) அவர்களிடம் ஒருவர் பற்றி கூடாத விடயங்களை கூறிய சஹாபியிடம் உமர் ரலி அவர்கள் கேட்டார்கள் "நீ அவருடன் கொடுக்கல் வாங்கல் செய்திருக்கிறாயா?"
"இல்லை" என பதிலளித்தார் பின்னர்  "அவருடன் பிரயாணம் செய்து ஒன்றாக தங்கி ஒன்றாக சாப்பிட்டு நாட்களை கழித்திருக்கிறாயா?
" இல்லை"
"நீ அவருடைய அண்டை வீட்டுக்காரனா? "
"இல்லை"
"இப்படி எதுவும் இல்லை என்றால் நீ சொல்ற விடயம் பொய்.என்னிடம் அடி வாங்காமல் ஓடி விடு"என்று உமர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.இத்தகைய அழகிய வழிகாட்டலை கொண்ட இஸ்லாம் மார்க்கத்தில் பெண்கள் குறித்த சில ஆண்களின் கேள்விகள் அடிக்கடி என்னை ஆத்திரமூட்டவே செய்கின்றன.

ஒவ்வொரு பெண்ணுக்கும் தனிப்பட்ட பண்புகள் விருப்பு வெறுப்புக்கள் என்று வேறுப்பட்ட இயல்புகள் இருக்கவே செய்கின்றன.அப்படி தான் வாணியும் அவளுக்கே உரித்தான பாணியில் பழகுவாள்.அது குழந்தை உமர் காலித்திடம் அதிக தாக்கம் செலுத்தியிருந்தது."வாணி பார்க்க போவமா?" என்று வினவுவான்.ஏதோ தியட்டரில் படம் பார்க்க போவமா என்று கேட்பது போல வாணி பார்க்க போவமா எனக்கேட்கும் போது அவனை அள்ளி அனைத்துக் கொஞ்சி "இல்ல போறல்ல"என்று சொன்னால் "போவமே அபி வா மாணி பாக்க போவம் "என்று கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு வந்திடுவான்.அவள் சென்ற முறை வந்து போனது குழந்தைக்கு பெரிதும் தாக்கமில்லை ஆனால் இம்முறை நீண்ட நாட்கள் பழகி விட்டாள் போகும் போது என்ன நடக்குமோ என பயந்து கொண்டிருந்தேன்.நல்ல வேளை அவள் விமான நிலையம் செல்லும் போது உமர் காலித் உறங்கிவிட்டிருந்தான்.

எனக்கு பிரியாணி என்றால் அலாதிப்பிரியம் முன்பு வாணி செய்த பிரியாணி இப்ப சாப்பிடனும் போலவே இருந்தது.நான் உண்டாகி இருப்பது தெரிந்தால் எனை எதுவும் செய்ய விடமாட்டாள்."அங்க போகாத இங்க போகாத என்ன பார்க்க வராத உடம்ப பார்த்துக்க நேரத்துக்கு சாப்பிடு" என்று ஆயிரத்தெட்டு ஆச்சி டிப்ஸ் சொல்வாள் அதனால் சந்தர்ப்பம் வரும் போது சொல்லிக்கலாம் என்டு இருந்திட்டன்.ஆனாலும் வாய் பிரியாணியை ருசி பார்க்கவே ஆசைப்பட்டது.இந்திய பிரியாணிக்கும் இலங்கைக் கடைகளில் கிடைக்கும் பிரியாணிக்கும் அதிக வேறுபாடுகள் உண்டு.கொழும்பிலுள்ள கடைகளில் கணவர் பிரியாணி வாங்கி வந்தால் இருவருக்கிடையில் முரண்பாடு தோன்றும்.காரமும் எண்ணெய்யும் அதிகமாக இருக்கும்.மஞ்ச கலரிலும் சிவப்பு கலரிலும் சாயம் உபயோகித்திருப்பார்கள்.
"ஊத்த கலரில் இருந்தா மாத்திரம் பிரியாணி வாங்குங்க" என்பேன் ஒரு முறை பம்பலப்பிட்டியில் சாப்பிட்ட நினைவு அதன் பிறகு அந்த டேஸ்டில் எங்கும் கிடைக்கல. நான் இந்தியாவின் எந்த பிரதேசத்திற்கு சென்றாலும் சாப்பிட நினைப்பது பிரியாணி தான்.கொழும்பிலுள்ள இந்தியன் ரெஸ்டொரன்ட்களில் சாப்பிட்டாலும் அந்த ருசி வருவது கிடையாது.அதன் அசல் டேஸ்டில் வாணி சென்ற முறை வந்த போது செய்த பிரியாணி அமைந்திருந்தது.இந்த நேரத்தில என்ன சாப்பிட பிடிக்குமோ அதனையே எல்லோரும் கொடுப்பர் ஆனா அதனை சொல்லாமலே அவளிடம் கேட்டேன்
"பிரியாணி செய்து தாறிங்களா?"
"அடுத்த முறை வரும் போது கட்டாயம் செய்து தாறேன்டா" என்றவளிடம் எதுவும் சொல்ல முடியாதவளானேன்.

முற்றும்-
12-05-2017

Wednesday, October 11, 2017

-பொம்புள- பத்தி -02

பெற்றோர் தன்னுடன் இருக்கும் அவளுடைய திருமண புகைப்படத்தை முகநூலில் பிரசுரித்திருந்தாள்.அவளை ஆஹா அழகு அற்புதம் என்றெல்லாம் கூறி பின்னூட்டம் வரவேண்டும் என்பதல்ல அவளது எதிர்பார்ப்பு. இணை பிரியாத காதலால் அடுத்தடுத்து மரணித்துவிட்ட தன் பெற்றோர் தன்னுடன் இருப்பதான உணர்வினை ஏற்படுத்தும் வண்ணம் அந்த படத்தை தன் புரபைல் பிக்சராக போட்டிருக்கலாம் எனக் கருதுகிறேன்.

அங்கு இடப்பட்டிருந்த பின்னூட்டம் என்னை நகைப்புக்குள்ளாக்கியது."ரிமூவ் பண்ணவும்"  இந்த பின்னூட்டம் குறித்து சிந்திக்கலானேன்.அவளுக்கு பிடித்திருக்கு அதனால் அவள் பிரசுரித்திருக்கிறாள் இதில் அடுத்தவருக்கு என்ன மன உளைச்சல்? சரி நண்பர் அல்லது நலன் விரும்பி என்று எடுத்துக்கொள்வோம்.அப்படி தான் இருந்தாலும்  நல்ல சுயசிந்தனை உள்ள படித்த பெண் அவ்வாறு ஒரு படத்தினை பிரசுரிக்கும் பொழுது இது குறித்து அவள் தானே சிந்திக்க வேண்டும் இல்லையெனில் அவளுடன் முகநூலில் நட்பு பட்டியலில் இருக்கும் தம்பியோ கணவனோ இது குறித்து   பேசலாம்.ஆனால் பொம்புள என்றவுடன் சாரன மடிச்சிக்கட்டும் சகோதர பாசமும் டிசைனும் இன்னும் தான் புரியல. அவளுக்கு வந்த அறிவுரைகள் நிமித்தம் அந்த புரபைல் பிக்சர் பின் நீக்கப்பட்டது.

ஆண்களின் அவ்ரத் தொப்புள் முதல் முட்டங்கால் வரையானது எனின் வெறும் உள்ளாடையான அந்த சட்டியுடன் நீச்சலடித்து படம் பிரசுரித்துள்ள ஆண்கள் குறித்து ஒரு கனம் சிந்திக்க எனக்கு அவசியமில்லை.அந்த படத்தின் கீழ் பின்னூட்டம் வழங்கியுள்ள மச்சான்மார்கள் தான் கவலைப்படனும்

" மச்சி சூப்பர்டா"
"எங்கடா இது?சூப்பர்டா மச்சான் "
"என்ஜோய்டா மச்சி"

இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய போதனைகள் எங்குள்ளது?சரீஆ சட்டம் வெறும் பெண்ணுக்கானதா??இந்த கேள்விகள் வீசப்பட வேண்டியது அந்த பின்னூட்டம் வழங்கிய மச்சான்மார்கள் மீது தான் என்பது உறுதி.

ரஜனி நடித்து வெளியான கபாலி திரைப்படம் இலங்கையின் பல தியேட்டர்களிலும் திரையிடப்பட்டிருந்த நேரமது.முகநூலில் ஒரு புகைப்படத்தை போட்டு அந்த படத்தை நம் சோனிகாக்காக்கள் பின்னூட்டங்களால் பென்ட் எடுத்துக்கொண்டிருந்தனர்.அப்படி என்ன போட்டோ அது எனப்பார்த்தால் நான்கு பெண்கள் தியேட்டர் வாசலில் எடுத்துக்கொண்ட போட்டோ.பின்னூட்டங்கள் பலவாறு அமைந்திருந்தன

"மறுமையைப் பயந்து கொள்ளுங்கள் சகோரிகளே"
"நரக நெருப்பு "
"அல்லாஹ் தான் உங்களுக்கு நேர்வழி காட்டனும்"

இத்தனைக்கும் பின்னூட்டம் வழங்கியிருந்த நம் மேலான சகோதரர்கள் அனைவரும் தியேட்டர் சென்று வரிசையில் நீண்ட நேரம் நின்று கபாலி படத்தை பார்த்து ரசித்தவர்கள் தான்.(ஒரே நாளில் பல தியேட்டர்களில் நம் காக்காமார்களை எடுத்த போட்டோக்கள் உள்ளன)

என்னைப்பொருத்த வரை இஸ்லாம் அழகான மார்க்கம்.அல்குர் ஆன் அற்புத வழிகாட்டி. நபிகளாரின் சொல் செயல் அங்கீகாரம் அனைத்தும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பளிக்கின்றன.பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வண்ணம் இறங்கப்பட்ட அந்-நிஷா இன்னும் இன்னும் பெண்களுக்கு மகத்துவமளிக்கிறது.இதனை விட வேறு என்ன தேவை?
நான் பெண்
மகத்துவமானவள்

இஸ்லாத்தின் மீதான வெறுப்பை கட்டமைத்து விட்டிருப்பவர்கள் மேற்சொன்ன மச்சான் மார்களும் சரிஆ சட்டங்களை பிரயோகிப்பவர்களும் தான்.நம் நாட்டில் முஸ்லிம் பெண்கள் மீது மட்டுமே சட்டங்களை திணித்து திணித்து ஆண்களுக்கு இஸ்லாம் மார்க்கம் இல்லை எனுமளவுக்கு காலம் வேகமாகபோய்க்கொண்டிருக்கிறது.

-பொம்புள- பத்தி -01


"சவூதி அரசாங்கம் பெண்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி இல்லையென விதித்திருந்த தடையை நீக்க போவதாக கேள்வி வரும் ஜூன் மாதத்தில் அமுலுக்கு வரும்" என ஆசிரியை ஒருவருடன் கலந்துரையாடும் போது அருகிலிருந்த ஆண் ஆசிரியர்  "உங்களுக்கு சரியான சந்தோஷம் ஆக்கும்" என்றார்.பதிலுக்கு நானும் " இதில் சந்தோஷ ப்பட என்ன இருக்கு?மடமையிலிருந்த சவூதி அரசுக்கு புத்தி வந்திருக்கு.இத்தனை வருடங்களும் அந்நிய சாரதியுடன் தன் மனைவியை அனுப்பி வைத்தவன் இப்போது அவளாக போகப்போறாள்.அவ்வளவு தான் இனித்தான் அவளுக்கு பாதுகாப்பு " என்று சொல்லி அவ்விடத்தை விட்டகன்றேன்.

நான் சந்தோஷப்பட்டு உடன் வாகன சாரதி அனுமதி பத்திரம் எடுத்து விடுவேனோ என்ற நக்கல் பொதிந்த கேள்விக்கு பதில் 7 வருடங்களுக்கு முன்னரே சாரதி அனுமதிப்பத்திரம் பெற்று விட்டேன் என்பது தான்.

ஊரிலிருந்து வந்த உறவுக்கார சகோதரி ஒருவருடன் பெண்கள் வாகனம் ஓட்டுவது பற்றி உரையாடிக்கொண்டிருந்தேன்." நம்ம ஊரில் மோட்டார் சைக்கிள் ஒட்டும் முதல் பெண்ணாக உங்களைத்தான் கண்டிருக்கேன்.அந்த ஊர் ஆக்கள எப்படி தான் சமாளிக்கிறங்களோ "என்று சொல்லிச் சிரித்த போது அவ பேசத் தொடங்கினார்.

"அதை ஏன் மன கேட்கிறீங்க, நான் பைசிக்கள் ஓட்டுறன் என்று 11 மொட்டக்கடிதங்கள் பள்ளிக்கு வந்தனவாம்.பள்ளித்தலைருக்கு இது பெரிய தலயிடியாம்.என்ன விசாரணைக்கு கூப்பிட்டாங்க.ஏதோ தவறு செய்து விட்டவள விசாரிக்கப்போற மாதிரி பள்ளியில எல்லோரும் இருந்தாங்க. ஊருல களவுல பொம்புளக்கிட்ட போய்ட்டு வார ஹாஜியார்மாரெல்லாம் தைரியமா பள்ளிக்குள்ள வந்து போகக்க எனக்கென்னமன பயம்? நான் தைரியமா போனேன்.என்ன கூப்பிட்ட என்டு கேட்டன்."
பள்ளித்தலைவரு தொடங்கினார்
"இல்ல நீங்க ஒரு பொம்புள மொட்டசைக்கல் ஓட்டுறயாம் என்டு மொட்டக்கடிதங்கள் நிறைய வந்திருக்கு இத விசாரிக்க தான் கூப்பிட்டம்.,"

ஓம் நான் மரியாதை உடுத்து என்ட செலவுல என்ட சைக்கிள்ள போறன் இதில எவனுக்கும் என்னவாம்?யாரோ ஒரு ஆட்டோக்காரனோட தனியா நம்மட பொம்பளயல் தொடக்கம் உங்கட பொஞ்சாதிமார் வரை போறது சரி என்டு உங்களுக்கு எப்படி தோனுதோ அப்படி தான் நான் மோட்டபைக்கில போறது எனக்கு சரி என்டு படுது தலைவர்"

"அதுசரி நீங்க சொல்றயும் சரிதான்"

"நான் போயிட்டு வாரன்"

".........ங்.....வ்......."

Saturday, October 7, 2017

விழித்துக்கொண்டதா சமூகம்??

முஸ்டீன் தன்னுடைய சிறுகதைகளில் சிலவற்றைத்   தொகுத்து வெளியிடும் போது நான் கேட்ட விடயம் "இவ்வளவு துணிச்சலாக அரசியலை பதிவு செய்கிறீர்களே உங்களுக்கு இந்த அரசாங்கத்தால் பிரச்சனை வராதா?"என்றதற்கு அவர் சொன்ன பதில் "அதனால் தான் இந்த தொகுப்பில் ஹராங்குட்டி சிறுகதையைச் சேர்த்து தொகுதிக்கும் ஹராங்குட்டி என்று பெயர் வைத்துள்ளேன் இந்த சமூகம் ஹராங்குட்டி என்ற சொல்லுக்கு பின்னால் தான் தொங்கிக்கொண்டு திரியும் எனக்கெதிராக பிட்டிசம் அடிக்கவெல்லாம் நேரமிக்காது இந்த சல்ஜாப்புக்கூட்டமெல்லாம் பெயரப்பார்த்திட்டே வாசிக்காம போயிரும் அதனால் எனக்கு பிரச்சினையும் குறையும்.அதையும் தாண்டி வாசிப்பது என்றால் இந்த ஹாரங்குட்டி கதையை மட்டும் தான் வாசிப்பானுங்க.வாசித்து விட்டு முஸ்டீன் மௌலவிமார்களுக்கு எதிராகவும் இஸ்லாத்திற்கு எதிராகவும் எழுதியிருக்கான் என்டு பிரச்சாரம் பண்ணுவானுங்க.கடைசியா இந்த சமூகத்த காட்டிக்கொடுத்திட்டான் என்டு முத்திரைய குத்துவானுங்க.ஒன்டுக்கும் ஆத்தாம போனால் என்னை ஹராங்குட்டி என்டு சொல்லி அவன் சுய இன்பம் காண்பான்.இது தான் கேடு கெட்ட சோனிகளின் நிலை அவ்வளவு தான் இந்த சமூகம்" என்று அலுத்துக்கொண்டார்.

சிறுகதை தொகுதி வெளிவந்த பின்னர் அது தான் நடந்தது.கல்முனையில் நடக்க இருந்த நூல் வெளியீட்டு நிகழ்வை சிலர் தடுத்து நிறுத்தி சுய இன்பம் கண்டனர்.ஹராங்குட்டி சிறுகதையை பேசு பொருளாக்கி முஸ்டீனை எவ்வளவுக்கெவ்வளவு கழுவி ஊத்த ஏலுமோ அவ்வளவுக்கவ்வளவு கழுவிய சுரனை கெட்டோர் பிழைக்கும் தவறுக்கும் துனை போய் தங்கள் நிலைப்பாட்டையும் வயிற்றுப்பிழைப்பையும் தக்க வைப்பதில் நியாயம் கண்டனர்.அப்பாவிச் சிறார்கள் துஸ்பிரயோகங்களுக்கு உட்படுவதனைக்கண்டும் நம் சமூகத்திலுள்ளோரை நாமே காட்டிக்கொடுப்பதுபோலாகிவிடும் என்றும் நம்முடைய சமூகப் பிரச்சனை அடுத்த சமயத்தவர்களுக்கு தெரியக்கூடாது என்று சொல்லி நித்தியானந்த சுவாமி பற்றியும் கிறிஸ்தவ பாதிரி பற்றியும் ஹாமுதுரு பற்றியும்  கதையளந்து துர் நாற்றம் பரப்பி தன் சமூகத்திலுள்ள சாக்கடைகளுக்கு அத்தர் தெளித்து பூட்டி வைத்தார்கள்.

"இந்த சமூகம் எக்கேடு கெட்டாவது போகட்டும் எனக்கென்ன வந்தது? " எனக் கூறி என்னை சமாதானப்படுத்தினார் முஸ்டீன். இந்த சமூகம் குறித்தும் கவலைப்பட்ட போது ஒரு நாளைக்கு உமர் வருவார் சாட்டையைக் கையிலெடுப்பார் எனத் தேற்றினார்.அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என நினைக்கிறேன்.எமது சமூகம் விழித்துக்கொண்டுள்ளது.இன்றைய தலைமுறை தவறை தவறு என சொல்லத் துணிந்திருக்கிறது என்பதை பல பதிவுகள் வாயிலாக வாசிக்க கிடைக்கிறது.அநாதைச் சிறுமிகள் துஸ்பிரயோகம் தொடர்பில் இரண்டு மாதங்களுக்கு முன் என்னுடன் நீண்ட நேரம் உரையாடிய சிரேஷ்ட பெண் ஊடகவியலாளர் தான் கொண்ட சமூக நலத்தை வெளிப்படுத்த  நம்மாள் எதுவும் செய்ய முடியாதுள்ளதே என கலங்கி நின்றார்.ஆனால் இரண்டு மாதங்களுக்குப்பிறகாவது நமது சமூகம் சிந்திக்க தலைப்பட்டிருப்பது சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கிய பயணம் என்றே எண்ணத்தோனுகிறது.

இப்படி நான் எழுதும் போது இன்னொன்று நினைவு வருகிறது.இதனை வாசிக்கும் சுரனை கெட்ட கூட்டிக்கொடுக்கும் சில சோனிங்க பட்டானி ராசிக்கின் கொலையையும் முஸ்டீ னையும் தொடர்பு படுத்தி ஒரு பின்னூட்டம் இடும்.ஒன்றுக்கும் லாயிக்கில்லாதவர்களால் செய்யக்கூடிய உச்ச பட்ச சமூக சீர்திருத்தம் என்பது தன்னால் எதுவும் முடியாது என்ற போது  எதையாவது குத்தி நாற்றம் வரவழைத்து மோந்து பார்ப்பது தான். அதனை விட பெரிய இன்பம் எதுவுமில்லை. அது தான் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இவை அனைத்தையும் கடந்து சில இள இரத்தங்கள் சமூகத்திற்காய் பேசும்.

Sunday, August 6, 2017

தவற விட்ட உரையும் 47வது இலக்கிய சந்திப்பும் (மலையகம்)


சென்ற முறை கிழக்கில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது என்று முஸ்டீன் அங்கலாய்த்துக்கொண்டிருந்த போது மீண்டும் இலங்கையில் நடக்குமாயின் கட்டாயம் கலந்து கொள்ளனும் என்றார்.மலையக இலக்கிய சந்திப்பு நடைபெற போவது குறித்து முகநூலினூடே அறியக்கிடைத்தது.

பெண்ணிய அரங்கில் பேசுகின்றீர்களா என லறீனா ராத்தா கேட்டதற்கிணங்க நானும் முன்னாள் போராளிப் பெண்களின் படைப்பிலக்கியங்கள் குறித்து பேசலாம் என்றேன். ஒரு வாரத்தின் பின்னர் திலகர் அண்ணா தலைப்பு தொடர்பில் உறுதிப்படுத்திக்கொண்டார். ஆய்வுக்கட்டுரையின் Soft Copy தேவைப்படுமா? கோவையாக போடும்P எண்ணம் உள்ளதா என்பதனை தெரிந்து கொள்ள லறீனா ராத்தாவை தொடர்பு கொள்ள முடியாமல் போகவே லுனுகல சிறியிடம் கேட்ட போது இல்லை என்பதை குறிப்பிட்டார்.

சர்மிளா ஷெய்த்திடம்  தொலைபேசியில்  இலக்கிய சந்திப்புக்கு வருவியா என கேட்ட போது ஏற்கனவே அதற்குள் பிரச்சினையாம் இதில நான் எங்க போறது என்று குறிப்பிட்டார்.அப்போது தான் கத்னா உரையினால் உண்டான  இலக்கிய சந்திப்பு உட்பூசல் தெரிய வந்தது.ஆனால் லறீனா ராத்தா எதுவுமே தெரியாதவர் போன்று கடைசி வரை இருந்துவிட்டார்.இது குறித்து விசாரித்த போதும்  சரி ஆரம்பத்தில் அரங்குகள் குறித்து கேட்ட போதிலும் சரி எதுவுமே கூறவில்லை.அது அவரின் குழுஒருமைப்பாட்டினைக் காட்டுகின்றது என்றே நினைக்கிறேன்.வெளியேற்றம் குறித்து கேட்ட போதும் அப்படி எதுவும் நடக்காத மாதிரி சமாளித்து விட்டார்.ஒருவேலை நான் கலந்து கொள்ளாமல் விட்டுவிடுவேனோ என்று மறைத்தாரோ தெரியவில்லை.இது இவ்வாறிருக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான தயார்படுத்தல்களை ஒரு மாதத்திற்கு முன்பே  செய்து விட்டிருந்தேன் புகையிரத பயணச்சீட்டிற்கான வரன்ட் எடுத்து லுனுகல ஸ்ரீயின் மகளுக்கு கிப்Ft வாங்கி வைத்து உரைக்கு தேவையான நூல்களினை வெற்றிச்செல்வி,மிதயா கானவி ஆகியோரிடம் அனுப்ப சொல்லியும் சில நூல்களினை ஹேமச்சந்திர பத்திரன அவர்களிடமிருந்தும் பெற்று தொடர்ச்சி யான வாசிப்பில் மூழ்கியிருந்தேன்.

முகநூல் தொடர்பு குறைவு என்பதனால் பனிப்போர், சூறாவளி, காட்டுத்தீ போன்றவை என்னை தீண்டுவதில்லை..நிகழ்ச்சியிற்கு முந்திய தினம் கணவர் ,குழந்தையுடன் வருவேன் தங்குமிடம் தேவை என்பதனை திலகர் அண்ணாவிடம் தெரிவித்திருந்தேன்.ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால்  குறிப்பிட்ட தினத்தில் என்னை அழைத்துச் செல்ல முஸ்டீன் வரவில்லை.இருந்த போதும் இறுதி நேரம் வரை ஆயத்தமாகவே இருந்தேன்.கொழும்பிலிருந்து செல்பவர்களுடன் சேர்ந்து செல்லலாம் ஆனால் என் சின்ன வான்டா தனியாய் சமாளிக்க முடியாது என்பதனால் முஸ்டீன் வந்து அழைத்துச்செல்லும் வரை காத்திருந்தேன்.இருந்தும் என்னால் கலந்து கொள்ள முடியாமல் போனமை முஸ்டீன் மீது ஆத்திரத்தினை உண்டு பண்ணி ஊடலில் முடிந்தது.காரணம் வெற்றிச் செல்வி பல சிரமத்திற்கு மத்தியிலும் தன்னுடைய அத்தனை நூல்களையும் யாழிலிருந்து கொழும்பு வரும் பேரூந்தில் அனுப்பி வைத்திருந்தமையும் ஏனைய கற்றல் விடயங்களை தவிர்த்து தொடர்ச்சியான வாசிப்பிலிருந்தமையினாலுமாகும்.

முஸ்லிம் உறுப்பினர்களின் கதைகளை கேட்டு நான் பங்கு பெறவில்லை என பேச்சடிபட்டதாக அறிந்தேன்.அந்த முஸ்லிம் உறுப்பினர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த காக்கா தம்பிமார் மூன்று பேருடனோ றியாஸ் குரானாவுடனோ குறைந்தது முகநூல் தொடர்பேனும் எங்களுக்கில்லை.மிகுதி ஒரே ஆள் லறீனா. இலக்கிய சந்திப்பு தொடர்பான முதல்  கலந்துரையாடல் அவருடைய இல்லத்தில் நடை பெறுவதற்கு முந்திய தினம் என்னுடைய வீட்டிலிருந்தே அவசரஅவசரமாக புறப்பட்டுச் சென்றார்.எதிர்பார்த்திராத விதமாக நோன்பு தலைப்பிறை தென்பட்டதனால் நான் போகவேண்டாம் என தடுத்தும் இல்லை நாளை சமைக்க வேனும் நான் போகவே வேண்டும் என பிடிவாதமாக சென்றார்.இங்கு முக்கியமான விடயம் என்னவெனில் என்னையோ அல்லது நிகழ்வில் பங்குகொள்ள இருந்த யாரையும் போக  வேண்டாம் என்று சொல்லுமளவு லறீனா அற்பத்தனமானவரும் அல்ல பிழையான அறிவுறுத்தல்களை தொடருமளவுக்கு நாங்களுமில்ல.இறைவன் அந்த உரையினை நாடவில்லை என்றே நான் நினைக்கிறேன்.,

இவை எல்லாவ ற்றையும் தான்டி நேற்று குழும மின்னஞ்சல்களை பார்க்க நேரிட்டது அதில் பெண்ணிய அரங்கில் நான் கலந்து கொள்வதனால் எபியெம் இத்ரீசுக்கு அசௌகரியம் இருப்பதாகவும் அதனால் அவ்வரங்கில் இருந்து அவரின் பெயரை நீக்கி விடும்படி இத்ரீசின் தம்பி இம்தாத் பண்ணிய மெய்லைப் படிக்கக் கிடைத்தது. "அவ்வரங்கில் நான் தன்னினச் சேர்க்கையாளர்கள் குறித்தோ அல்லது அமெரிக்க உலக யூதர் ஒன்றியத்தின் நிதியுதவியில் இயங்கும் ஈக்குவல் கிரவுன்டின் வளவாளர்கள் குறித்தோ அல்லது ஜாமியா நளீமியாவின் விரிவுரையாளர் தரத்திலிருந்து அவரை நீக்குவதற்கு நளீமிய நிருவாகம் எடுத்த முன்னெடுப்புகள் குறித்தோ நான் பேச இருக்கவில்லையே.."முன்னாள் போராளிப் பெண்களின் படைப்பிலக்கியங்களில் மேலோங்கியிருக்கும் பெண்ணியக்கருத்துக்க ள்" பற்றி தானே பேச இருந்தன் பின்னர் ஏன் அவருக்கு சங்கடம் ஏற்பட வேண்டும்? அவருக்கு நிகழ்வில் பங்கு கொள்ள வேறு காரணம் சொல்ல முடியாததற்கு இவ்வாறு சொன்னதாகவும் பூசி மெழுகப்பட்டது.பெண்களுக்கான (தாய்,சகோதரி) உரிமைகள் மறுக்கப்பட்ட வீட்டிலிருந்து ஓர் ஆண் பெண்ணியம் பேச எத்தனிக்கின்ற போது அவ்வரங்கில் பேச எனக்குத்தான் அவமானம்.

வேணாம் வாயக்கிளற. 

இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
நன்றி
வணக்கம்.

Friday, June 2, 2017

பேன் சிந்தனை

செயற்றிட்டம் கருத்தரங்கு
கலந்துரையாடல் விளக்கம்
சிந்தனை ஆலோசனை
எதற்கும் வாய்ப்பு வழங்காமல்
முழு நாளை ஒட்டு மொத்தமாக ஆக்கிரமித்திருந்தன
ஈரு..ஒட்டு..பேன்..

அன்றைய நாளின் தலையிடி
தலைக்கடியாய் அமைந்து போயிற்று அவர்களுக்கு
பெண்ணிய சிந்தனை பற்றிய
கருத்து வெளிப்பாடு
தலைவாருதலையும் சீப்பையும்
குறித்தே அமைந்ததாயிற்று

இந்த பேன் தொல்லைக்கு
மருந்து கட்டியாகனும்
முடியை விரித்துப்போட்டு
தலைக்கடி தீர
சொறிய வேண்டும்
பேன் சீப்பால் வார வேண்டும்
போன்ற சிந்தனையை தவிர
மற்றயவற்றை
சொறிச்சல் கட்டியாண்டது

எப்போது  வீடு போய்ச் சேருவோம்
என்ற வினாவினை
மூளைக்கு பேன் கொடுத்து
கடியை உண்டாக்கி
சுதந்திரமாக மயிரூடே
அழைந்து திரிந்தது.

சபையில்
கடி தீர
தலையைச் சொறியவும்
பேனை எடுத்து
குத்தவும் முடியாமல் அன்றைய பொழுது கழிந்தது

தலையை வெட்டி
மடியில் வைத்து
பேன் பார்க்கும் நம் சமுதாய சிந்தனை சிற்பிகளை என்னவென்பது?
மலத்தியன்பவுடரைக் குழைத்து
தலையில் தேய்த்தாலும் கடி அடங்காது.