Saturday, April 30, 2016

மறைக்கப்பட்ட முதலாவது கூட்டுப்படு கொலையும் என் மாமனாரின் மரணமும்

தந்தையின் இழப்பு
1985 ஏப்ரல் 29ம் திகதி வாழைச்சேனைப் பிரதேசத்தில் உள்ள மூக்கர்கல் எனும் பகுதியில் வைத்து எட்டுப்பேர் ஆயுதக் குழுவொன்றினால் கடத்தப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சாக்குப் பை அளிக்கப்பட்டு அதனை மண்ணைக் கொண்டு நிரப்பப் பணிக்கப்பட்டனர் பின்னர் அந்த மண்மூடையுடன் அவர்கள் இணைத்துக்கட்டப்பட்டனர் பின்னர் உயிரோடு ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டு மிகக் கொடுரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். இதுதான் கிழக்கில் நிகழ்ந்த முதலாவது கூட்டுப்படுகொலை. அவர்களில் முதலாவதாகக் கொலை செய்யப்பட்டவர் காவத்தமுனையைச் சேர்ந்த சீனி முஹம்மது செய்ஹ் இஸ்மாயீல் என்பராவார். அப்போது அவருக்கு 25 வயதுதான்.

ஒரு விவசாயியாகவும் கூலித் தொழிலாளியாகவும் இருந்த செய்ஹ் இஸ்மாயீல் மற்றவர்களுக்கு உதவுகின்ற எண்ணங்கொண்ட மிகுந்த தைரியசாலியும் பலசாலியுமாவார். அவரைப் பற்றி அவரது நண்பர்களிடம் விசாரிக்கும் போது ஆச்சரியமிகு தகவல்களே எமக்கும் கிடைக்கப்பெற்றன. வேலை செய்யும் போது பல்வேறு விதமான நாட்டார் பாடல்களையும் இசைத்த வண்ணமும், அதே மெட்டில் சந்தர்ப்பத்திற்கேற்றவிதத்தில் சொற்களைக் கோர்த்து உடனடியாகப் பாடும் திறமையும் வாய்க்கப்பெற்றவராகவும் திகழ்ந்தார். இனிமையான குரல்வளமிக்க அவர் உச்சஸ்தானியில்தான் அதிகம் பாடுவாராம். காடு  வெட்டிக் களனியாக்க கத்தியைக் கையில் தூக்கிவிட்டால் பாட்டுக்குப் பஞ்சமே இருக்காதாம்.

பாடசாலைக் கல்வியில் ஏழாம் ஆண்டு வரை மட்டுமே நிலைத்திருந்தார். அதற்கு மேல் படிக்க அவரது குடும்ப சூழ்நிலை விடவில்லை. இவர் படிப்பதைக் காட்டிலும் வேலைசெய்து தனக்கு ஒத்தாசையாக இருப்பதையே அவரது தந்தை விரும்பியிருந்தார். அதனாலேயே எப்போதும் உழைப்பதைப் பற்றியே வழியுறுத்தினார்.

இன்றுடன் செய்ஹ் இஸ்மாயீல் மரணித்து சரியாக 31 வருடங்கள். அவரது மரணம் அதிக பாதிப்பைத் தந்தது எனக்குத்தான். அவரது மரணத்திற்காக இன்றுவரை வேதனைப்படும் ஒரு உயிர் இப்புவியில் வாழ்கின்றதென்றால் அது நான்தான். அவரை ஒரு நாளைக்கு ஐந்து வேளை நினைவுகூர்ந்து அவருக்காகப் பிரார்த்திக்கும் ஒரு ஜீவன் இருக்கின்றதென்றால் அதுவும் நான்தான். எல்லோரும் அவரை மறந்துவிட்டாலும் எப்போதும் அவரை ஞாபகத்தில் இருந்தி அவருக்கு ஹீரோ அந்தஸ்து கொடுத்திருப்பதும் நான்தான். ஏனெனில் அவர் எனது தந்தை.

இந்த மரணம்தான் என்னை வாழ்வின் எல்லாவிதமான இடர்களையும் கடந்து அனுபவித்துப் பயணிக்க வைத்தது. ஓர் அநாதை இல்லத்தில் எனது சிறுபராயத்தைச் சிறை வைத்தது. கட்டடிளமைப்பருவத்தில் இரத்தவேகத்திற்கேற்ப கட்டற்ற கோபத்தையும் ஆத்திரத்தையும் அதிவேகச் செயற்பாட்டையும் எனக்குள் பிரளயமாக்கியது.
இப்போதும் நான் யோசிக்கின்றேன்
பயம் என்றால் என்ன?
அச்சப்படுதல் என்றால் என்ன?
பின்வாங்குதல் என்றால் என்ன?
முதுகில் குத்துதல் என்றால் என்ன?
இவைபற்றியெல்லாம் எனக்குத் தெரியாது.

ஒரு தந்தையின் இழப்பு அதுவும் சிறுவயதில் அவரை இழந்துவிட்டால் ஒருவன் தன் வாழ்வில் எதையெல்லம் இழப்பான் என்பதற்கு நானே நல்ல உதாரணம். இந்த நாட்டில் துவங்கிய பிரிவினைவாத யுத்தம் எனக்குத் தந்த படுமோசமான பரிசு எனது தந்தையின் மரணம்தான். அது மரணமல்ல படுகொலை.

33 வருட வாழ்க்கையில் ஒருவன் எதையெல்லாம் அனுபவிக்கக் கூடாதோ, எந்தத் தளங்களிளெல்லாம் கால்வைக்கக் கூடாதோ எந்த அனுபவங்களெல்லாம் அவனுக்குத் தேவையில்லையோ அவற்றையெல்லாம் காலம் என்மீது பிசிறியடித்துவிட்டது.
அந்த அனுபங்களின் அறுவடைதான் இப்போதைய எனது எழுத்துக்கள். அந்த அனுபவத்தின் வழி நின்றே அவை முனைப்புப் பெறுகின்றன. எல்லாவற்றையும் கடந்துபோகப் பழக்கியிருக்கின்றன. எவ்விதமான பாரதூமான குற்றச்சாட்டாயினும் நெஞ்சுநிமிர்த்தி எதிர்கொள்ளப் பயிற்றுவித்திருக்கின்றன. ஒரு படைப்பாளிக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்.

எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து வாழ்வின் சவால்களை நெஞ்சுரத்துடன் எதிர்கொள்வதுதானே சுவாரஷ்யமான வாழ்க்கை. அந்த சுவாரஷ்யம் வாழ்வில் நீடிக்க வேண்டுமானால் அதற்குத் தகுந்த எதிரிகள் எமக்கு இருக்க வேண்டும். அப்படி எதிரி அமைந்தவர்கள் வரலாற்றில் தமக்கான இடத்தை உறுதி செய்துவிடுவார்கள். எதிரி அமையாதவர்கள் சாதாரணமாக வாழ்ந்து கழிவர்.

போரினால் தந்தையை இழந்த அனைத்துள்ளங்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலிகள்.

குழந்தைக்குப் பிறகு

நீண்ட நாட்களுக்குப்பிறகு வலைப்பூவில் என் எழுத்துக்கள் தடம் பதிப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி. உமர் காலித் பிறந்த பிறந்த பின்னரான நான் முன்பை விட வேகமான இயந்திரமானேன்.இனித் தினமும் எழுத்து வேட்டை தான்.

திருமணமான பிறகு பெண்கள் காணமல் போய் விடுகிறார்கள் என்பது உண்மை தான் அதற்கான காரணங்களும் நியாயமானவைகளாக இருப்பின் மற்றவர்கள் தூண்டலாக இருப்பதும் தேவைதானே.

Friday, April 29, 2016

தனிமை


இந்த அமைதி பொல்லாதது
என்னை பனியில் உறைத்து விடுகிறது
கடலில் மிதந்து
கரையேறும் போது
மீண்டும் யாரோ வந்து
தள்ளி விட்டுச் செல்கிறார்கள்

குழந்தை தண்ணீரில் விளையாடி
மகிழ்கிறது.
என்னால் கரையொதுங்க முடியவில்லை
மீண்டு ஆழத்தினை நோக்கி நகர்கிறேன்

அண்டை வெளியது
யாருமற்ற அந்த நிலப்பரப்பு
என்னை மிருதுவாய் இழுத்துச் செல்கிறது
நான் உணர்கிறேன்
முன்னொரு போதும் கிடைத்திடாத. இனிமை..
சலனமற்ற அந்த பொழுதில்
எல்லாவற்றையும் துறந்துவிடுகிறது


Sunday, October 25, 2015

முகாந்திரம்



நீ கட்டமைத்திருக்கும் 
என் வாழ்வு 
கட்டிப் போட்டிருக்கும் 
என் செயற்பாடுகள் 
உறையவைக்கப்பட்ட 
என் திட்டங்கள் 
சுருக்கிடப்பட்ட 
என் ஆசைகள் 
சொல்லி மாளாத 
வலிகள் அத்தனையும் 
என் பெயர் கொண்ட 
இரகசிய குறியீட்டால் 
கட்டியாளப்படுகின்றன 

கல்சிய பாறைகளாய் 
என் ஆற்றல்கள் 
படிந்து  போயின. 
அவ்வப்போது 
என் ஆளுமைகளை 
கொப்பி கட் பேஸ்ட் 
என்றெல்லாம்  முடக்கி விடுகிறாய்.

என் உணர்வுகளை
உடைத்து விட்டு 
நதியாய் நீ புறப்படுகிறாய்  

என் கால்கள் 
உயிர்த்து விட்டன இப்போது
நகர்ந்து கொண்டிருக்கிறேன் 
விரைவில்  நடக்க இருக்கிறேன்.
நீ சொன்ன வட்டத்திற்குள் மட்டும்! 


Thursday, October 30, 2014

மறக்க நினைத்தாலும் மன்னிக்கமுடியாததாய்

 மீண்டும் மீண்டும் அந்த நிகழ்வு என்னில் வந்த போகிறது. 2012 ஆம் ஆண்டு பட்டப்பின் கல்வி டிப்ளோமாவினை திறந்த பல்கலைக்கழகத்தில் பயின்றேன் 8 பாடங்களுடன் ஆசிரிய பயிற்சியும் சேர்த்து 9 பாடங்கள். நான் கல்வியியல் கல்லூரியில் பயின்ற அதே விடயங்கள் என்பதால் கற்றல் மிக இலகுவாக இருந்தது. நான் தமிழ் மொழி ஆசிரியை என்பதால் கற்பித்தல் பயிற்சியிற்கும் தமிழ் மொழியையே தெரிவு செய்திருந்தேன்

சென்ற வருடம் 2ஆம் கட்ட ஆசிரிய பயிற்சியை  தொடர வேண்டி இருந்தது. ஆசிரிய பயிற்சியை மேற்பார்வை செய்வதற்காக  விரிவுரையாளர்கள் அமர்த்தப்படுவர். முதலாம் கட்ட ஆசிரிய பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, இரண்டாம் கட்ட ஆசிரிய பயிற்சியின் போதுதான் அந்த விரிவுரையாளரை சந்தித்தேன். இதற்கு முன் கண்டதில்லை. ஆனால் அவரினுடைய பெயர் பரிச்சயமானது. சிறுகதை இலக்கியத்தில் தடம் பதித்து ஒரு தொகுதியையும் போட்டிருந்தார். அந்தத் தொகுதிக்கு சாகித்தியப் பரிசு கிடைக்கவிருப்பதாக உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெற்றது.  சிறுகதை எழுதுகின்றாரே தவிர தமிழ்மொழிப் பாடத்துடன் தொடர்புபட்டவரல்ல. அவர் கணிதப்பாடம் மேற்பார்வை செய்பவர். ஆயினும் கற்றல் கற்பித்தல் முறைகளை எந்தவொரு விரிவுரையாளனும் அறிந்து வைத்திருப்பான் என்பதனால் பல்கலைக்கழக நிருவாகம் அவரைத் தமிழ்மொழிப்பாடக் கற்பித்தலில் என்னை மேற்பார்வை செய்யப் பணித்திருக்கக்கூடும்.

கற்பிப்பது எனக்கு கைவந்த கலை. கற்பித்தலை நான் வெகுவாகக் காதலித்துச் செய்வதால் அது கடினமானதே கிடையாது. கல்லூரியில் 3 வருடத்தில் 100ற்கு மேற்ப்பட்ட ஆசிரிய பயிற்சிகளை மேற்கொண்டுள்ளேன். நான் எவ்வாறு கற்பிப்பேன் என்பதை என்னுடைய விரிவுரையாளர்கள் அறிவர் கூடவே மாணவர்களும், ஆக ஆசிரிய பயிற்சிக்காக மிக மிக ஆர்வத்துடன் தயாரானேன். 2 பாடங்கள் கற்பிக்க வேண்டும். தரம் 7 ற்கு நீர்வைப் பொண்னையனின் பாசம் சிறுகதையையும் தரம் 11 ற்கு விளம்பரம் கற்பிக்கவும் வேண்டியிருந்தது.

மாணவர்களைக் கவரும் விதத்தில் நவீன தொழிநுட்ப சாதனங்களைப் பயன்படுத்திக் கவர்ச்சிகரமாக கற்பிக்க வேண்டும் என்பதால், மிகவும் சிரத்தையெடுத்தேன். சிறுகதையை ஒலிப்பதிவு செய்து எடிட் செய்ய அன்றைய தினம் என் கணவர் வீட்டில் இருந்திருந்தால் இலகுவாக இருந்திருக்கும். ஆயினும் அவர் மட்டக்களப்பு வரைச் சென்றிருந்ததால் உடனடியாக நண்பர் டிரோனை தொடர்பு கொண்டு சிறுகதையை ஒலிப்பதிவு செய்து நாளை காலை ஆசிரிய பயிற்சி இருப்பதால் அவசரமாக எடிட் செய்து தர முடியுமா எனக்  கேட்டேன். அவரும் அதை  ஏற்றுக் கொண்டதுடன் 2.00 மணிக்கே ஸ்டூடியோவுக்கு வருமாறு சொன்னார். பாடசாலை முடிந்ததும் நான்; உணவருந்தக் கூட அவகாசமில்லாது அவ்வளவு களைப்புடனும் அங்கு போய்ச் சேர்ந்தபோது மிகவும் சோர்ந்து போயிருந்தேன். ஆயினும் எதையும் சிரமமாகக் கருதாது ஒலிப்பதிவைச் செய்து கொடுத்துவிட்டு அதை எடிட் பண்ணி மெய்ல் பண்ணுமாறு வேண்டிக் கொண்டு வீட்டுக்கு வந்து சேரும் போது மணி 05.00

அந்த ஒலிப்பதிவு கிடைக்கும் வரை ஏனைய தயார் படுத்தல்களை மேற்கொண்டேன். தரம் 11 ற்கு விளம்பரம் கற்பிப்பதற்கான ஒலி ஒளி நாடாக்களை எடுத்து வைத்தேன். வகுப்பறையில் சத்தமாக ஒலிக்கக் கூடிய ஒலி பெருக்கியை ரூபா 950 கொடுத்து வாங்கி வைத்திருந்தேன். வீடியோவைப் போடத்தக்கதாக ஒரு டெப் இனையும் ஏற்பாடு செய்திருந்தேன். எடிட் செய்த ஒலிப்பதிவை டிரோன் மின்னஞ்சல் செய்கையில் நேரம் அதிகாலை 3 மணியாகியிருந்தது. பலத்த சிரமத்திற்கு மத்தியில் அவர் எனக்கு உதவியிருக்கக்கூடும். காலையில் கிருலப்பனை தமிழ் மஹா வித்தியாலய மாணவர்களுக்கு கற்பிக்கப் போகவேண்டுமே என்ற எண்ணத்துடன் கண்ணயர்ந்தேன்.

காலையில் நேரகாலத்தோடு எழுந்து உரிய பாடசாலைக்குச் சென்று அறிமுகமே இல்லாத புதிய மாணவர்களுக்கு கற்பிக்கக் காத்திருந்தேன்.  

மூன்றாம் பாடத்திற்கு மணியடித்ததும் தரம் 07 மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக வகுப்பறையில் நுளையும் போதே எனது கற்பித்தலை மேற்பார்வை செய்யவந்திருந்த அவரும் வகுப்பினுள் நுளைந்தார்.  நுளையும் போதே கையடக்கத் தொலைபேசியைக் காதினுள் வைத்துக் கொண்டே வந்தமர்ந்தார். 

நானும் அவர் சதவதானியாக இருப்பாரோ என்ற எண்ணத்துடன் 5 ஈ சிஸ்டத்திற்கமைவாக கற்பிக்கத் தொடங்கினேன். புதுமையானதும் இலகுவானதுமான கற்பித்தல் முறையில் மாணவர்கள் முழுமையாக் கற்றலில் ஈடுபட்டனர் . நானும் 5ஈ சிஸ்டத்திற்கமைய நாற்பது நிமிடங்களையும் கற்றல் கற்பித்தலில் மாணவர்களை ஈடுபடுத்தி வழிகாட்டினேன். எனை மேற்பார்வை செய்ய வந்த விரிவுரையாளரும் அந்த நாற்பது நிமிடமும் போனிலேயே தொங்கினார். அது போலவே ஆறாம் பாடத்திற்கு மணியடித்ததும்  தரம் 11 இல் கற்பித்தலைத் தொடங்கினேன். அப்போதும் அந்த சதவதானி அலைபேசியை காதிற்குள் செருகிக் கொண்டே வந்து அமர்ந்து நான் கற்பித்து முடியும் வரையும் குசுகுசுத்துக் கொண்டே இருந்தார். பாடம் முடிந்ததும் அவர் பாட்டில் காதினுள் இடுக்கிய அலைபேசியுடன் எழுந்து சென்றுவிட்டார். 

அவரின் நடத்தை குறித்து எனது கணவரிடம் சொன்னபோது அவர் நீ ஏன் இப்போது டென்ஷனாகின்றாய், நீ நன்றாகக் கற்பிப்பதால் உன்னை அவதானிக்கத் தேவையில்லையென்று இருந்திருக்கக் கூடும். எதற்கும் பெறுபேறுகள் வரும்வரைப் பொருத்திரு என்றார்.

கடந்த மார்ச் மாதம் அளவில் பெறுபேறும் வெளியானது, கற்பிக்கவே கஸ்டப்படும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏ (ப்ளஸ்) வந்திருந்தது எனக்கோ ஏ (மைனஸ்) வந்திருந்தது. நான் அதிர்ந்து போனேன். எனக்குக் கண்ணீரே வந்துவிட்டது. அப்போது நான்  ஆறுமாதக்; கர்;ப்பிணியாக இருந்தேன்.  பல்கலைக் கழக நிருவாகத்துடன் தொடர்பு கொண்டு அவரின் முறையற்ற மேற்பார்வை குறித்துக் கூறியபோது முறைப்பாட்டுக் கடிதம் கோரினர்.நான் கர்ப்பிணியாக இருந்ததால் அழ முடிந்ததே தவிர அவருக்கெதிராக நடவடிக்கையெடுக்கும் மனநிலையில் இருக்கவில்லை.நான் அழுது கொண்டிருக்கையில் முஸ்டீன் சொன்னார் 
'அவன் கிடக்கான் மொக்கன், அந்த லூசன் செய்த வேலைக்கு நீ ஏன் அழுகிறாய்' என்றார். 
எனக்கு சிரிப்பு வந்து விட்டது. பின் அதை மறந்து விட்டேன்.

மிக அண்மையில் கேள்விப்பட்டேன் அந்தத் சதாவதானி கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக ஆய்வு செய்யப் போகின்றாராம்.

வாழ்க எதிர்கால கல்விச் சமுதாயம்.

ஷாமிலா முஸ்டீன்

Tuesday, September 2, 2014

ஃபேக் ஐடி

இப்போது ஃபேக் ஐடி எனும் முகநூல் பக்கங்களின் அதிகரிப்பு நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ச்து செல்வதை அவதானிக்கலாம். ஒரு வரை தரம்குறைத்துப் பேசவும் அவமானப்படுத்தவும் இந்த ஐடி களையே முகம் தெரியாத நபர்கள் பாவிக்கிறார்கள். ஒருவரின் படத்தைப் பாவித்து அவரது பெயரிலேயே ஒரு போலி முகநூல் பக்கத்தையும் தொடங்கி வேண்டாதவர்களை அவமதிக்கும் செயலைச் செய்பவர்கள் நிச்சமாக மனிதப் பெறுமானங்கள் அற்றவராகவே இருப்பர். இப்படிப்பட்டவர்களை இனங்கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதோடு அவர்களுத் தண்டனையும் பெற்றுக் கொடுப்பது மிகவும் முக்கியமான விடயம்.

எனது பெயரையும் படங்களையும் பயன்படுத்தி நான் கற்பிக்கும் பாடசாலைக்கு எதிராகவே மிக மோசமான சொல்லக் கூசும் வார்த்தைகளைக் கொண்டு தூற்றும் நடவடிக்கையினைச் சிலர் அன்மைக்காலமாக செய்து வருகின்றனர். அவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிற்பார்கள் அப்போது அவர்களைப் பார்த்து சமுகம் கை கொட்டிச் சிரிக்கும்.
 இதில் மிகவும் கவலைகிடமான வேதனை தரும் விடயம் விடயம் ஃபேக் ஐடிகள் மூலம் பரப்பப்படும் விடயங்களை பாமரர்கள் மட்டுமல்லாது படித்த உயர் அதிகாரிகள் கூட நம்பித்தொலைவதுதான். அவர்களின் அறிவு அவ்வளவுதான் என்று நாம்தான் அமைதியாக இருக்கவேண்டும்.

எல்லாக் குற்றவாளிகளும் ஏதோவோர் தடயத்தை விட்டுச் செல்கின்றனர் எனும் முதுமொழி போலி முகநூல் பக்கம் செய்யும் இவர்கள் விடயத்திலும்  பொய்யாகவில்லை. கேலமான அந்த ஜந்துகளை நான் சபிக்கிறேன். அவர்கள் நாசமாய்ப் போக. உலகிலும் மறுமையிலும் இழிந்தவர்களாக அல்லாஹ் அவர்களை ஆக்கட்டும்.
எல்லாவற்றுக்கும் அல்லாஹ் ஒருவனே போதுமானவன்.

Friday, September 20, 2013

ஒர் இஸ்லாமியப் பெண் தொலைக்காட்சி ஒன்றில்......

விஜய் தொலைகாட்சியின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியிலே பங்கு கொண்ட முஸ்லிம் சகோதரயின் கானொலியினை முகப்புத்தகம் ஒன்றில் பார்க்கக் கிடைத்தது. நானும் அந்த பக்கத்தினை லைக் செய்திருக்கிறேன்.நியாயமான கேள்விகளுடன் அந்த முகப்புத்தகம் அமைந்திருந்தது.அதற்கு பல பின்னூட்டங்களை காணக் கிடைத்தது.ஆதரவாகவும் எதிராகவும்.பிழை நடக்கும் போது அதனை சுட்டிக்காட்டும் உரிமை யாருக்கும் உண்டு.உரியவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும்.இதற்கு  முதலில் அந்த நிகழ்ச்சியை நான் தொலைக்காட்சியில் பார்த்த போது இது குறித்து எழுத நினைத்திருந்தேன்.ஆனால் வேலைப்பளு காரணமாக மறந்து விட்டேன்.

நமது சமயத்தில் பலர் விடும் தவறு என்னவெனில் பிழைகளை சுட்டிக் காட்டும் போது சமயத்தின் பெயரால் தவறுகளை மறைக்க நினைப்பது தான் .நித்தியானந்தாவின் கானொலிகளை  பார்த்து விமர்சிக்கும் நம்மில் சிலர் ,ஏனைய மாற்று மத சகோதரிகளின் செயல்களுக்கு பின்னூட்டம் வழங்கும் நம்மில் சிலர்,கருத்துகளை தெரிவித்து பெண்ட் எடுக்கும் பலர், நமது தவறுகளை இஸ்லாத்தின் பெயரால் மறைக்க நினைகின்றனர்.இப்படி பூட்டிப் பூட்டி வைத்து எத்தனையோ பேர் சீரழிந்து போகின்றனர்.நமது சமூகமும் கெட்டுக்  குட்டிச் சுவராக போகிறது.

ஒர் இஸ்லாமியப் பெண் தொலைக்காட்சி ஒன்றில் எவ்வாறு தோற்றமளிக்கனும் என்பதனை அறிந்து வைத்திருத்தல் வேண்டும்.செய்மதியூடாக தொலைக்காட்சி சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ள இக் கலிகாலத்தில் உலகம் முழுதும் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறனர்  என்ற அடிப்படை அறிவு கூட இன்றி நான்கு சுவரில் பேச வேண்டிய விடயங்களைப் பேசுவதும் மறைக்கப்படவேண்டிய பாகங்களைக் காட்டுவதும் அநாகரிகமான செயலாகும்.இதற்கு வக்காலத்து வாங்குகின்றவர்கள் வேறு.இலக்கியம் கலை  என்றபெயரில் நம் நாட்டிலும் பெண்கள் மறைகப்படவேண்டிய பாகங்களை திறந்து காட்டிக் கொண்டு புகைப்படங்களை சமூக தளங்களில் பிரசுரிப்பதும் அதற்கு நம் சமூகத்திலே ஒரு கூட்டம் வரிந்து கட்டிக் கொண்டு பின்னூட்டம்  வழங்குவதும் அருவருக்கத்தக்கது.அதற்கு எதிரான கருத்துக்கள் வரும் போது தங்களை  விமர்சிக்கின்றனர் என அறிக்கை விட்டு பலனில்லை.முஸ்லிம் பெண் என்பவள் யார் என்பதை அவளே உணர வேண்டும்.தான் கதைப்பது மார்க்க வரையறைக்குள் உள்ளதா என்றும் தன்னுடைய அவ்றத் என்ன என்பதையும் அவள் அறிய வேண்டும்.கைக்குட்டை போன்ற துண்டினை தலையில் போட்டு நீங்கள் முஸ்லிம் பெண் என்று காட்டுவதினாலே பிறர் விமர்சிக்கின்றனர் என்பதனை சிந்திக்க வேண்டும்.உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ளும் போது இன்னொருவர் விமர்சிக்க இடமிருக்காது.அதனை விட்டுப் போட்டு சுதந்திரம் சமத்துவம் பேசினால் இப்படி சந்தி சிரிக்க வேண்டி வரும்.