Thursday, October 30, 2014

மறக்க நினைத்தாலும் மன்னிக்கமுடியாததாய்

 மீண்டும் மீண்டும் அந்த நிகழ்வு என்னில் வந்த போகிறது. 2012 ஆம் ஆண்டு பட்டப்பின் கல்வி டிப்ளோமாவினை திறந்த பல்கலைக்கழகத்தில் பயின்றேன் 8 பாடங்களுடன் ஆசிரிய பயிற்சியும் சேர்த்து 9 பாடங்கள். நான் கல்வியியல் கல்லூரியில் பயின்ற அதே விடயங்கள் என்பதால் கற்றல் மிக இலகுவாக இருந்தது. நான் தமிழ் மொழி ஆசிரியை என்பதால் கற்பித்தல் பயிற்சியிற்கும் தமிழ் மொழியையே தெரிவு செய்திருந்தேன்

சென்ற வருடம் 2ஆம் கட்ட ஆசிரிய பயிற்சியை  தொடர வேண்டி இருந்தது. ஆசிரிய பயிற்சியை மேற்பார்வை செய்வதற்காக  விரிவுரையாளர்கள் அமர்த்தப்படுவர். முதலாம் கட்ட ஆசிரிய பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, இரண்டாம் கட்ட ஆசிரிய பயிற்சியின் போதுதான் அந்த விரிவுரையாளரை சந்தித்தேன். இதற்கு முன் கண்டதில்லை. ஆனால் அவரினுடைய பெயர் பரிச்சயமானது. சிறுகதை இலக்கியத்தில் தடம் பதித்து ஒரு தொகுதியையும் போட்டிருந்தார். அந்தத் தொகுதிக்கு சாகித்தியப் பரிசு கிடைக்கவிருப்பதாக உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெற்றது.  சிறுகதை எழுதுகின்றாரே தவிர தமிழ்மொழிப் பாடத்துடன் தொடர்புபட்டவரல்ல. அவர் கணிதப்பாடம் மேற்பார்வை செய்பவர். ஆயினும் கற்றல் கற்பித்தல் முறைகளை எந்தவொரு விரிவுரையாளனும் அறிந்து வைத்திருப்பான் என்பதனால் பல்கலைக்கழக நிருவாகம் அவரைத் தமிழ்மொழிப்பாடக் கற்பித்தலில் என்னை மேற்பார்வை செய்யப் பணித்திருக்கக்கூடும்.

கற்பிப்பது எனக்கு கைவந்த கலை. கற்பித்தலை நான் வெகுவாகக் காதலித்துச் செய்வதால் அது கடினமானதே கிடையாது. கல்லூரியில் 3 வருடத்தில் 100ற்கு மேற்ப்பட்ட ஆசிரிய பயிற்சிகளை மேற்கொண்டுள்ளேன். நான் எவ்வாறு கற்பிப்பேன் என்பதை என்னுடைய விரிவுரையாளர்கள் அறிவர் கூடவே மாணவர்களும், ஆக ஆசிரிய பயிற்சிக்காக மிக மிக ஆர்வத்துடன் தயாரானேன். 2 பாடங்கள் கற்பிக்க வேண்டும். தரம் 7 ற்கு நீர்வைப் பொண்னையனின் பாசம் சிறுகதையையும் தரம் 11 ற்கு விளம்பரம் கற்பிக்கவும் வேண்டியிருந்தது.

மாணவர்களைக் கவரும் விதத்தில் நவீன தொழிநுட்ப சாதனங்களைப் பயன்படுத்திக் கவர்ச்சிகரமாக கற்பிக்க வேண்டும் என்பதால், மிகவும் சிரத்தையெடுத்தேன். சிறுகதையை ஒலிப்பதிவு செய்து எடிட் செய்ய அன்றைய தினம் என் கணவர் வீட்டில் இருந்திருந்தால் இலகுவாக இருந்திருக்கும். ஆயினும் அவர் மட்டக்களப்பு வரைச் சென்றிருந்ததால் உடனடியாக நண்பர் டிரோனை தொடர்பு கொண்டு சிறுகதையை ஒலிப்பதிவு செய்து நாளை காலை ஆசிரிய பயிற்சி இருப்பதால் அவசரமாக எடிட் செய்து தர முடியுமா எனக்  கேட்டேன். அவரும் அதை  ஏற்றுக் கொண்டதுடன் 2.00 மணிக்கே ஸ்டூடியோவுக்கு வருமாறு சொன்னார். பாடசாலை முடிந்ததும் நான்; உணவருந்தக் கூட அவகாசமில்லாது அவ்வளவு களைப்புடனும் அங்கு போய்ச் சேர்ந்தபோது மிகவும் சோர்ந்து போயிருந்தேன். ஆயினும் எதையும் சிரமமாகக் கருதாது ஒலிப்பதிவைச் செய்து கொடுத்துவிட்டு அதை எடிட் பண்ணி மெய்ல் பண்ணுமாறு வேண்டிக் கொண்டு வீட்டுக்கு வந்து சேரும் போது மணி 05.00

அந்த ஒலிப்பதிவு கிடைக்கும் வரை ஏனைய தயார் படுத்தல்களை மேற்கொண்டேன். தரம் 11 ற்கு விளம்பரம் கற்பிப்பதற்கான ஒலி ஒளி நாடாக்களை எடுத்து வைத்தேன். வகுப்பறையில் சத்தமாக ஒலிக்கக் கூடிய ஒலி பெருக்கியை ரூபா 950 கொடுத்து வாங்கி வைத்திருந்தேன். வீடியோவைப் போடத்தக்கதாக ஒரு டெப் இனையும் ஏற்பாடு செய்திருந்தேன். எடிட் செய்த ஒலிப்பதிவை டிரோன் மின்னஞ்சல் செய்கையில் நேரம் அதிகாலை 3 மணியாகியிருந்தது. பலத்த சிரமத்திற்கு மத்தியில் அவர் எனக்கு உதவியிருக்கக்கூடும். காலையில் கிருலப்பனை தமிழ் மஹா வித்தியாலய மாணவர்களுக்கு கற்பிக்கப் போகவேண்டுமே என்ற எண்ணத்துடன் கண்ணயர்ந்தேன்.

காலையில் நேரகாலத்தோடு எழுந்து உரிய பாடசாலைக்குச் சென்று அறிமுகமே இல்லாத புதிய மாணவர்களுக்கு கற்பிக்கக் காத்திருந்தேன்.  

மூன்றாம் பாடத்திற்கு மணியடித்ததும் தரம் 07 மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக வகுப்பறையில் நுளையும் போதே எனது கற்பித்தலை மேற்பார்வை செய்யவந்திருந்த அவரும் வகுப்பினுள் நுளைந்தார்.  நுளையும் போதே கையடக்கத் தொலைபேசியைக் காதினுள் வைத்துக் கொண்டே வந்தமர்ந்தார். 

நானும் அவர் சதவதானியாக இருப்பாரோ என்ற எண்ணத்துடன் 5 ஈ சிஸ்டத்திற்கமைவாக கற்பிக்கத் தொடங்கினேன். புதுமையானதும் இலகுவானதுமான கற்பித்தல் முறையில் மாணவர்கள் முழுமையாக் கற்றலில் ஈடுபட்டனர் . நானும் 5ஈ சிஸ்டத்திற்கமைய நாற்பது நிமிடங்களையும் கற்றல் கற்பித்தலில் மாணவர்களை ஈடுபடுத்தி வழிகாட்டினேன். எனை மேற்பார்வை செய்ய வந்த விரிவுரையாளரும் அந்த நாற்பது நிமிடமும் போனிலேயே தொங்கினார். அது போலவே ஆறாம் பாடத்திற்கு மணியடித்ததும்  தரம் 11 இல் கற்பித்தலைத் தொடங்கினேன். அப்போதும் அந்த சதவதானி அலைபேசியை காதிற்குள் செருகிக் கொண்டே வந்து அமர்ந்து நான் கற்பித்து முடியும் வரையும் குசுகுசுத்துக் கொண்டே இருந்தார். பாடம் முடிந்ததும் அவர் பாட்டில் காதினுள் இடுக்கிய அலைபேசியுடன் எழுந்து சென்றுவிட்டார். 

அவரின் நடத்தை குறித்து எனது கணவரிடம் சொன்னபோது அவர் நீ ஏன் இப்போது டென்ஷனாகின்றாய், நீ நன்றாகக் கற்பிப்பதால் உன்னை அவதானிக்கத் தேவையில்லையென்று இருந்திருக்கக் கூடும். எதற்கும் பெறுபேறுகள் வரும்வரைப் பொருத்திரு என்றார்.

கடந்த மார்ச் மாதம் அளவில் பெறுபேறும் வெளியானது, கற்பிக்கவே கஸ்டப்படும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏ (ப்ளஸ்) வந்திருந்தது எனக்கோ ஏ (மைனஸ்) வந்திருந்தது. நான் அதிர்ந்து போனேன். எனக்குக் கண்ணீரே வந்துவிட்டது. அப்போது நான்  ஆறுமாதக்; கர்;ப்பிணியாக இருந்தேன்.  பல்கலைக் கழக நிருவாகத்துடன் தொடர்பு கொண்டு அவரின் முறையற்ற மேற்பார்வை குறித்துக் கூறியபோது முறைப்பாட்டுக் கடிதம் கோரினர்.நான் கர்ப்பிணியாக இருந்ததால் அழ முடிந்ததே தவிர அவருக்கெதிராக நடவடிக்கையெடுக்கும் மனநிலையில் இருக்கவில்லை.நான் அழுது கொண்டிருக்கையில் முஸ்டீன் சொன்னார் 
'அவன் கிடக்கான் மொக்கன், அந்த லூசன் செய்த வேலைக்கு நீ ஏன் அழுகிறாய்' என்றார். 
எனக்கு சிரிப்பு வந்து விட்டது. பின் அதை மறந்து விட்டேன்.

மிக அண்மையில் கேள்விப்பட்டேன் அந்தத் சதாவதானி கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக ஆய்வு செய்யப் போகின்றாராம்.

வாழ்க எதிர்கால கல்விச் சமுதாயம்.

ஷாமிலா முஸ்டீன்

No comments:

Post a Comment