Saturday, April 30, 2016

மறைக்கப்பட்ட முதலாவது கூட்டுப்படு கொலையும் என் மாமனாரின் மரணமும்

தந்தையின் இழப்பு
1985 ஏப்ரல் 29ம் திகதி வாழைச்சேனைப் பிரதேசத்தில் உள்ள மூக்கர்கல் எனும் பகுதியில் வைத்து எட்டுப்பேர் ஆயுதக் குழுவொன்றினால் கடத்தப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சாக்குப் பை அளிக்கப்பட்டு அதனை மண்ணைக் கொண்டு நிரப்பப் பணிக்கப்பட்டனர் பின்னர் அந்த மண்மூடையுடன் அவர்கள் இணைத்துக்கட்டப்பட்டனர் பின்னர் உயிரோடு ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டு மிகக் கொடுரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். இதுதான் கிழக்கில் நிகழ்ந்த முதலாவது கூட்டுப்படுகொலை. அவர்களில் முதலாவதாகக் கொலை செய்யப்பட்டவர் காவத்தமுனையைச் சேர்ந்த சீனி முஹம்மது செய்ஹ் இஸ்மாயீல் என்பராவார். அப்போது அவருக்கு 25 வயதுதான்.

ஒரு விவசாயியாகவும் கூலித் தொழிலாளியாகவும் இருந்த செய்ஹ் இஸ்மாயீல் மற்றவர்களுக்கு உதவுகின்ற எண்ணங்கொண்ட மிகுந்த தைரியசாலியும் பலசாலியுமாவார். அவரைப் பற்றி அவரது நண்பர்களிடம் விசாரிக்கும் போது ஆச்சரியமிகு தகவல்களே எமக்கும் கிடைக்கப்பெற்றன. வேலை செய்யும் போது பல்வேறு விதமான நாட்டார் பாடல்களையும் இசைத்த வண்ணமும், அதே மெட்டில் சந்தர்ப்பத்திற்கேற்றவிதத்தில் சொற்களைக் கோர்த்து உடனடியாகப் பாடும் திறமையும் வாய்க்கப்பெற்றவராகவும் திகழ்ந்தார். இனிமையான குரல்வளமிக்க அவர் உச்சஸ்தானியில்தான் அதிகம் பாடுவாராம். காடு  வெட்டிக் களனியாக்க கத்தியைக் கையில் தூக்கிவிட்டால் பாட்டுக்குப் பஞ்சமே இருக்காதாம்.

பாடசாலைக் கல்வியில் ஏழாம் ஆண்டு வரை மட்டுமே நிலைத்திருந்தார். அதற்கு மேல் படிக்க அவரது குடும்ப சூழ்நிலை விடவில்லை. இவர் படிப்பதைக் காட்டிலும் வேலைசெய்து தனக்கு ஒத்தாசையாக இருப்பதையே அவரது தந்தை விரும்பியிருந்தார். அதனாலேயே எப்போதும் உழைப்பதைப் பற்றியே வழியுறுத்தினார்.

இன்றுடன் செய்ஹ் இஸ்மாயீல் மரணித்து சரியாக 31 வருடங்கள். அவரது மரணம் அதிக பாதிப்பைத் தந்தது எனக்குத்தான். அவரது மரணத்திற்காக இன்றுவரை வேதனைப்படும் ஒரு உயிர் இப்புவியில் வாழ்கின்றதென்றால் அது நான்தான். அவரை ஒரு நாளைக்கு ஐந்து வேளை நினைவுகூர்ந்து அவருக்காகப் பிரார்த்திக்கும் ஒரு ஜீவன் இருக்கின்றதென்றால் அதுவும் நான்தான். எல்லோரும் அவரை மறந்துவிட்டாலும் எப்போதும் அவரை ஞாபகத்தில் இருந்தி அவருக்கு ஹீரோ அந்தஸ்து கொடுத்திருப்பதும் நான்தான். ஏனெனில் அவர் எனது தந்தை.

இந்த மரணம்தான் என்னை வாழ்வின் எல்லாவிதமான இடர்களையும் கடந்து அனுபவித்துப் பயணிக்க வைத்தது. ஓர் அநாதை இல்லத்தில் எனது சிறுபராயத்தைச் சிறை வைத்தது. கட்டடிளமைப்பருவத்தில் இரத்தவேகத்திற்கேற்ப கட்டற்ற கோபத்தையும் ஆத்திரத்தையும் அதிவேகச் செயற்பாட்டையும் எனக்குள் பிரளயமாக்கியது.
இப்போதும் நான் யோசிக்கின்றேன்
பயம் என்றால் என்ன?
அச்சப்படுதல் என்றால் என்ன?
பின்வாங்குதல் என்றால் என்ன?
முதுகில் குத்துதல் என்றால் என்ன?
இவைபற்றியெல்லாம் எனக்குத் தெரியாது.

ஒரு தந்தையின் இழப்பு அதுவும் சிறுவயதில் அவரை இழந்துவிட்டால் ஒருவன் தன் வாழ்வில் எதையெல்லம் இழப்பான் என்பதற்கு நானே நல்ல உதாரணம். இந்த நாட்டில் துவங்கிய பிரிவினைவாத யுத்தம் எனக்குத் தந்த படுமோசமான பரிசு எனது தந்தையின் மரணம்தான். அது மரணமல்ல படுகொலை.

33 வருட வாழ்க்கையில் ஒருவன் எதையெல்லாம் அனுபவிக்கக் கூடாதோ, எந்தத் தளங்களிளெல்லாம் கால்வைக்கக் கூடாதோ எந்த அனுபவங்களெல்லாம் அவனுக்குத் தேவையில்லையோ அவற்றையெல்லாம் காலம் என்மீது பிசிறியடித்துவிட்டது.
அந்த அனுபங்களின் அறுவடைதான் இப்போதைய எனது எழுத்துக்கள். அந்த அனுபவத்தின் வழி நின்றே அவை முனைப்புப் பெறுகின்றன. எல்லாவற்றையும் கடந்துபோகப் பழக்கியிருக்கின்றன. எவ்விதமான பாரதூமான குற்றச்சாட்டாயினும் நெஞ்சுநிமிர்த்தி எதிர்கொள்ளப் பயிற்றுவித்திருக்கின்றன. ஒரு படைப்பாளிக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்.

எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து வாழ்வின் சவால்களை நெஞ்சுரத்துடன் எதிர்கொள்வதுதானே சுவாரஷ்யமான வாழ்க்கை. அந்த சுவாரஷ்யம் வாழ்வில் நீடிக்க வேண்டுமானால் அதற்குத் தகுந்த எதிரிகள் எமக்கு இருக்க வேண்டும். அப்படி எதிரி அமைந்தவர்கள் வரலாற்றில் தமக்கான இடத்தை உறுதி செய்துவிடுவார்கள். எதிரி அமையாதவர்கள் சாதாரணமாக வாழ்ந்து கழிவர்.

போரினால் தந்தையை இழந்த அனைத்துள்ளங்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலிகள்.

குழந்தைக்குப் பிறகு

நீண்ட நாட்களுக்குப்பிறகு வலைப்பூவில் என் எழுத்துக்கள் தடம் பதிப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி. உமர் காலித் பிறந்த பிறந்த பின்னரான நான் முன்பை விட வேகமான இயந்திரமானேன்.இனித் தினமும் எழுத்து வேட்டை தான்.

திருமணமான பிறகு பெண்கள் காணமல் போய் விடுகிறார்கள் என்பது உண்மை தான் அதற்கான காரணங்களும் நியாயமானவைகளாக இருப்பின் மற்றவர்கள் தூண்டலாக இருப்பதும் தேவைதானே.

Friday, April 29, 2016

தனிமை


இந்த அமைதி பொல்லாதது
என்னை பனியில் உறைத்து விடுகிறது
கடலில் மிதந்து
கரையேறும் போது
மீண்டும் யாரோ வந்து
தள்ளி விட்டுச் செல்கிறார்கள்

குழந்தை தண்ணீரில் விளையாடி
மகிழ்கிறது.
என்னால் கரையொதுங்க முடியவில்லை
மீண்டு ஆழத்தினை நோக்கி நகர்கிறேன்

அண்டை வெளியது
யாருமற்ற அந்த நிலப்பரப்பு
என்னை மிருதுவாய் இழுத்துச் செல்கிறது
நான் உணர்கிறேன்
முன்னொரு போதும் கிடைத்திடாத. இனிமை..
சலனமற்ற அந்த பொழுதில்
எல்லாவற்றையும் துறந்துவிடுகிறது