Saturday, March 16, 2013

அடக்கி விட முயலும் அதிகாரம்


அமைதியாக நான் இருந்ததில்
பொதிந்திருந்த அர்த்தம்
உனக்குப் புரிந்திருக்க நியாயமில்லை

தட்டிக் கேட்பததைத்  தட்டி விட்டு  
பலர் வாய்களை 
கட்டிப்  போட்டு 
அராஜகங்களை புன்னகைக்குள் 
அடக்கி விட முயலலும்
அதிகாரம் 
நிலைத்துருக்காது.


கருத்துச் சுதந்திரம் கூட இல்லாத
உனதாட்சி வேண்டுமெனில் 
காகிதப் பொம்மைகளுக்குப் பிடிக்கலாம்

முறைத்துப் பார்த்து அடக்கி விடவும் 
சொடுக்குப்போட்டு மிரட்டிப் பார்க்கவும் 
சத்தமிட்டே வாயடைத்து வைக்கவும் 
உனக்கிருக்கும் ஆசைகளை அனுசரித்துப் போகவும் 
சகித்துக் கொள்ளவும் 
நானொன்றும் உன் மனைவி அல்லவே.  

நீ நீட்டும் விரலுக்கு 
சுளுக்குப் பிடிக்கவும் 
உடைத்து விடவும் 
நறுக்கி விடவும்
எனக்குத் தெரியும் 

வெண்டிக்காய் முத்தல் என்று 
தெரிந்தும் வீசி விட 
மனம் இடம் கொடுக்காது 
சமைப்பவள் அல்ல நான் .

அநியாயம் எவ்வடிவில் வரினும் தட்டிக் கேட்பேன் 
ஆயுள் கைதியாய் வாய்களைப் பொத்தி 
சிறை வாசம் அனுபவிக்க
நான் தயாரில்லை.

காலநிலை மாறுவது போல் 
பதில் கடமையும் மாறும் 
நான் எங்கு சென்றிடினும் 
நான் நானாகவே இருப்பேன்.



நீ என்ன கொம்பனா?



நீ
முன்பு கொத்தியதெல்லாம்
தேக்கு, பலா
வீரை, முதிரை
நான் வாழை
நீ மரங்கொத்தி!
மறந்துவிடாதே.

ஆப்பிழுத்த குரங்கு போல
நீ படும் பாடு கண்டு
இங்குள்ள காட்டு மிருகங்கள்
வேதனைப்படுகின்றன.
அவைகளுக்கும் சேரத்து
சொல்லி வைக்கிறேன்
உன் மிருக்ககாட்சி சாலைக்குள்
பறவைகள்
கூடுகட்டி வசிக்கின்றன
தண்ணீர்வற்றியதும்
பறந்துவிடுமெனச்
சிங்கம் சொன்னதால்
விட்டுவிடுகிறேன்.

நீ சுண்டெலி
நெல்லை நறும்பவும்
புனைக்கு தாப்புக்காட்டவுமே
உன்னால் முடியும்
உன்முகத்தைப் பார்த்து
புனைக்குட்டிகள் ஒதுங்கிக் கொள்கின்றன
சாப்பிட மனமின்றி
பயந்துவிடுவதாய் அர்த்தம் கற்பிக்காதே.

நீ நரி
காட்டிற்குவரும் காகத்தையெல்லாம்
கூட்டாளிபிடிக்கிறாய்
வேட்டைநாய் குரல் கேட்டால்
ஓடும் திசைஉனக்கே தெரியாது,

நீ குப்பைக்காகிதம்
காற்றுக்குமேலெழுந்து
கதிரையில் கிடந்தாலும்
சங்கமிப்பது
மீண்டும் தெருக்குப்பையோடே.

சளித்துண்டும் போர்க்கவசமும்



உன் சப்பை மூக்குஅதிர
கன்னத்தில் ஓங்கி அறைய
வேண்டும் போல இருக்கிறது
எறும்பரித்த பாண்துண்டு போலவும்
செப்பனிடப்படாத கிறவல் வீதி போலவும்
இருக்கும் பொறுக்குப்பிடித்த முகத்தில்
அந்த அறை அவசியமானதுதான்.

மணியடித்து
பாடத்திற்குச் செல்லும்
இடைவெளியளவு அவகாசத்தில் கூட
உன்னைப்பற்றி நினைப்பது கிடையாது,
உனது கர்வம்எல்லைகடந்த போது
பரிதாபமாய்ப் பார்த்து முகம் சுளித்தேன்

தொண்டை அரிப்பில்
காரி உமிழ்த்த சளித்துண்டு
மண்ணில் உருண்டு விழுந்த போது
ஒட்டிக்கொண்ட மணற்றுகள்களை
பாதுகாப்புக் கவசமாக கருதிக் கொண்டது
கெட்டித்தனம்தான்

பட்டப்படிப்பும் உயர்கல்வியும்
முட்டாள்தனமாய்த் தெரியும் உனக்கு
உலகம் குண்டுச் சட்டியளவுதான்
காற்றுக்கள்ளுண்டு செல்லும்
பல்லாயிரம் சருகுகளில் நீயும் ஒன்று

சட்டெனக் கிடைத்த அதிகாரம்
பட்டெனப்பறிபோகும் பயத்தில்
பித்துக்கலங்கியதில் ஆச்சரியமில்லை
உன்னைப் பார்த்துப் பரிதாபப்பட
சாரண் கட்ட வேண்டும்.

அசிங்கம் காய்ந்து உலர்ந்துவிட
ஒட்டிக் கொண்டவைகளும் உதிர்ந்துவிடும்
அப்போது-
எச்சில் துப்பப்பட்டதற்கான
அடையாளமே இருக்காது.