Saturday, March 16, 2013

சளித்துண்டும் போர்க்கவசமும்



உன் சப்பை மூக்குஅதிர
கன்னத்தில் ஓங்கி அறைய
வேண்டும் போல இருக்கிறது
எறும்பரித்த பாண்துண்டு போலவும்
செப்பனிடப்படாத கிறவல் வீதி போலவும்
இருக்கும் பொறுக்குப்பிடித்த முகத்தில்
அந்த அறை அவசியமானதுதான்.

மணியடித்து
பாடத்திற்குச் செல்லும்
இடைவெளியளவு அவகாசத்தில் கூட
உன்னைப்பற்றி நினைப்பது கிடையாது,
உனது கர்வம்எல்லைகடந்த போது
பரிதாபமாய்ப் பார்த்து முகம் சுளித்தேன்

தொண்டை அரிப்பில்
காரி உமிழ்த்த சளித்துண்டு
மண்ணில் உருண்டு விழுந்த போது
ஒட்டிக்கொண்ட மணற்றுகள்களை
பாதுகாப்புக் கவசமாக கருதிக் கொண்டது
கெட்டித்தனம்தான்

பட்டப்படிப்பும் உயர்கல்வியும்
முட்டாள்தனமாய்த் தெரியும் உனக்கு
உலகம் குண்டுச் சட்டியளவுதான்
காற்றுக்கள்ளுண்டு செல்லும்
பல்லாயிரம் சருகுகளில் நீயும் ஒன்று

சட்டெனக் கிடைத்த அதிகாரம்
பட்டெனப்பறிபோகும் பயத்தில்
பித்துக்கலங்கியதில் ஆச்சரியமில்லை
உன்னைப் பார்த்துப் பரிதாபப்பட
சாரண் கட்ட வேண்டும்.

அசிங்கம் காய்ந்து உலர்ந்துவிட
ஒட்டிக் கொண்டவைகளும் உதிர்ந்துவிடும்
அப்போது-
எச்சில் துப்பப்பட்டதற்கான
அடையாளமே இருக்காது.

No comments:

Post a Comment