Saturday, May 7, 2016

அந்த 7 அரை மாதங்கள் - அங்கம் 01

பெண் என்பவள் இறைவனின் மிக அழகான படைப்பு.ஒவ்வொருவருக்குமுள்ள இரசனை அவரரவர் சுவையை பொறுத்து வேறுபடுகின்றது.பெண்ணுக்கான குணாம்சங்களும் விருப்பபுகளும் எதிர்பார்ப்புகளும் யதார்த்தமானது.நாம் நினைப்பது வேறு.இறைவனின் நாட்டம் என்பது வேறு.

இறைவனின் நாட்டப்படியே என் வாழ்விலும் திருமணம் நடந்தேறியது.கல்யாணம் முடித்து இன்பகரமான வாழ்வு பாரதிராஜாவின் திரைப்படம் போல மிக அமைதியாக மேடு பள்ளமற்று சமதரையில் பயணிப்பதுபோன்றதொரு உணர்வை ஏற்படுத்திற்று.  எனக்கமைந்த வாழ்வும் என் கணவனின் குணப்பண்புகளும் ஆனந்தத்தின் உச்சிக்கு எனை அழைத்துச் சென்றது என்பது விமர்சகர்களுக்கு புள்ளி வழங்குவது போன்றது.

ஒருவரின் திருமணம் குறித்து இந்த சமூகம் என்ன பேசும் என்பதனை நான் நன்கறிவேன் ஏனெனில் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட முன்னரும் ஏப்பம் விட்டுக்கொண்டும் விருந்து கொடுத்தவரையே சேர்ப் எக்ஸல் போட்டு கழுவும் ஆசிரியர்களைக் கண்டிருக்கிறேன். இதில் என் விருந்துபசாரம் பற்றி சொல்லவும் வேண்டுமா?சிங்களப் படத்துக்கு போஸ்ட்டர் ஒட்டியது போன்று என் திருமணமும் பேசப்பட்டதற்கு காரணம் நான் என் கணவரிடம் கேட்டிருந்த மஹர் தொகை தான்.அதனை ஏதோ ஐஸ்வர்யா அமிதாப்பச்சன் மகன திருமணம் செய்த ரேஞ்சுக்கு ஒரு சில உறவினர்களும சில நண்பர்கள் போன்ற பெயரில் உலாவும் பொறுக்கிகள் விமர்சித்ததாக அறியக் கிடைத்தது.மஹர் தொகையை தீர்மானிக்கும் முழு உரிமையும் மனமகளுக்கானது என்றும் அதனைக் கூட்டுதல் குறைத்தல் தொடர்பில் கணவன் மனைவிக்கே உரிமை உண்டென்கிற அடிப்படை அறிவில்லாத மூன்றாம் கிளாஸ் பேர் வழிகள் என் கணவனை மிகக் காரசாரமாக விமர்சித்தாகவும் பின்னாளில் பௌராணிகர்கள் கதை கூறினர்.

இரண்டரை மாதங்களின் பின் என் கணவனை பிரிய நேரிடும் என நான் கனவிலும் நினைக்கவில்லை.எங்களின் மகிழ்ச்சியில் முக்கிய பங்கு அந்த வீட்டுக்குரியது.மயக்கம் விளைவிப்பது மாலை மாது மது போன்றவை மட்ட்மல்ல.கடலும் காற்றும் கரையும் அலையும் அதில் எழும் நுரையும் தான் என்பதனை அந்த வீட்டின் ஜன்னலூடாக பார்த்து நிரூபித்து  வியந்துள்ளேன்..
அலைகள் ஒயாது ஒன்றை ஒன்று துரத்தி விளையாடுதல் போல நாங்கள் இருவரும் அறை அறையாக மூடி விளையாடியது அவ்வளவு சீக்கிரம் முடிந்துவிடும் என்றும் நினைத்திருக்கவில்லை..

என்னுடைய பிரச்சனைகளையும் கவலைகளையும் அல்லாஹ்விடம் கொடுத்துவிட்டு நான் ரிலாக்ஸ் ஆக இருந்து விடுவதனைத்தான் வழக்கமாக்கி இருந்தேன்.வழக்கத்துக்கு மாறாக அவ்வளவு பெரிய பாரத்தையும் வலியையும் எதிர்பார்த்திருக்கவில்லை





Tuesday, May 3, 2016

அந்த 7 அரை மாதங்கள்

என் வாழ்வின் மறக்க முடியா அந்த 7 அரை மாதங்கள் பற்றி டயரிக்குறிப்புக்கள் எழுதியிருந்தேன்.என்னை முழுமனிதனாக மாற்றியதும் மனிதர்களைப்பற்றி மிக அழகாக கற்றுத்தந்ததும் அந்தக் காலப்பகுதி தான்.ஒர் இளம் பெண் சமூகத்தில் எப்படியான அவமானங்களைச் சந்திக்கக்கூடாதோ அவை அனைத்தனையும் சந்தித்தாயிற்று.இப்போது என்ன பிரச்சனை ஏற்பட்டாலும் அவற்றை சிறு புன்னகையால் கடந்து செல்கிறேன்..ஆனாலும் என் நலன் விரும்பிகள் அந்தக் காலப்பகுதியை நிச்சயம் எழுத்தில் வெளிக்கொணர வேண்டும் என்றே விரும்புகின்றனர்.என் விருப்பமும் அதுவாக அங்கம் அங்கமாய் இனித் தொடரும்.

Monday, May 2, 2016

கேள்விக்குறியாகும் பெண் கல்வி


பொதுவாக பெற்றோர் தம் பிள்ளைக்கு உயர் ரகமான உணவைக் கொடுக்கவும் உயர் ரக ஆடைகளை வாங்கிக் கொடுக்கவும் ஆங்கிலத்தில் ஸ்டைலாக பேசவும் பழக்கினால் போதும் என்றிருக்கிறார்களே தவிர பிரச்சினை ஏற்படும் போது அதனை எதிர்கொள்ளவும் சவாலுக்கு எவ்வாறு  முகம் கொடுப்பது போன்றவற்றை ஊட்டி வளர்ப்பதில்லை.வெறும் பேகர் பன் உணவாகக் கொடுத்தாலே தனது பிள்ளை ஹை பையாக வளருகிறது என்ற பெருமிதத்தோடு இருந்து விடுகின்றனர்.

குறிப்பாக பெண் பிள்ளைகள் பாடசாலையில் சின்ன விடயத்திற்காக அழுவதும் ஆசிரியர் அதட்டினால் காய்ச்சல் வருவதுமாக தங்களை மிகவும் பலவீனப்பட்டவர்களாக ஆக்கிக்கொள்வதற்கு பெற்றோரின் வளர்ப்பே காரணமாக அமைகிறது.

பெண்பிள்ளைகளை தனியே பாடசாலைக்கோ பிரத்தியேக வகுப்புகளுக்கோ அனுப்ப முடியல என்று சில பெற்றோர் அங்கலாய்த்துக்கொள்கின்றனர்.அதனால் தம் பெண் பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோரும் கூடவே சென்று காத்திருந்து கையுடன் கூட்டிக்கொண்டு வருவதனை தினமும் கண்ணாரக்காண்கிறோம்.

கலாசாரத்தை விடுத்து கலர்புல் பற்றியே யோசிப்பதனால் தான் இந்த நிலைமை.உங்கள் பெண் பிள்ளைகளுக்கு குதிரையேற்றத்தை கற்றுக்கொடுக்காவிடினும் தற்காப்புக் கலை தான் தெரியாவிடினும் குறந்தது பிரச்சினையை எதிர் கொள்ளும் பக்குவத்தையும் தைரியத்தையும்  துணிச்சலையும் ஊட்டி வளருங்கள்.

கொழும்பு வாழ் பெற்றோர்களே மேற் சொன்ன விடயத்தில் பெரிதும் உள்ளடக்கப்படுகின்றனர்.மாணவிகள்  கல்வியில் அதிகம் அக்கறை காட்டுகின்றனர் என்பதற்கு அண்மையில் வெளியான க.பொ.த.சா/தர பெறுபேறுகள் சான்று பகர்கின்றன.ஆனால் உயர் தரம் கற்று பல்கலைக்கழகம் செல்வோரின் தொகை கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை மிகக் குறைவு.அதற்கான பல காரணங்களில் பிரதான இடம் வகிப்பது பாடசாலைக்கு தனியாக அனுப்ப முடியாதிருப்பதும் பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுப்ப முடியாமையுமாகும் அவ்வாறு கல்வியைத் தொடர வேண்டுமெனில் பெற்றோரும் பிள்ளைகளின் பின்னால் அழைய வேண்டி இருப்பது என்பதாகும்.

கொழும்பு வாழ் பெற்றோர் இவ்விடயத்தில் அதிக சிரத்தை எடுப்பதுடன் நமது சமுதாயப் பெண்களின் எதிர்கால கல்வி வளர்ச்சி குறித்தும் ஆய்விட்குட்படுத்தி சரியான தீர்வு காணப்பட வேண்டும்.

கண்ணீருடன் "என்ன செய்ய படிக்க முடியல" என்று கூறும் மாணவிகளுக்கும் "என்ன செய்ய ஏன்ட பிள்ளைய படிக்க வைக்க ஆசதான் ஆனால் அவள கூட்டிட்டு போய் வாறத்துக்கு ஆள் இல்ல" என்று கூறும் பெற்றோருக்கும் விமோசனம் கிடைக்கப்பெற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரியட்டும்.

 ஷாமிலா செரீப்