Monday, May 2, 2016

கேள்விக்குறியாகும் பெண் கல்வி


பொதுவாக பெற்றோர் தம் பிள்ளைக்கு உயர் ரகமான உணவைக் கொடுக்கவும் உயர் ரக ஆடைகளை வாங்கிக் கொடுக்கவும் ஆங்கிலத்தில் ஸ்டைலாக பேசவும் பழக்கினால் போதும் என்றிருக்கிறார்களே தவிர பிரச்சினை ஏற்படும் போது அதனை எதிர்கொள்ளவும் சவாலுக்கு எவ்வாறு  முகம் கொடுப்பது போன்றவற்றை ஊட்டி வளர்ப்பதில்லை.வெறும் பேகர் பன் உணவாகக் கொடுத்தாலே தனது பிள்ளை ஹை பையாக வளருகிறது என்ற பெருமிதத்தோடு இருந்து விடுகின்றனர்.

குறிப்பாக பெண் பிள்ளைகள் பாடசாலையில் சின்ன விடயத்திற்காக அழுவதும் ஆசிரியர் அதட்டினால் காய்ச்சல் வருவதுமாக தங்களை மிகவும் பலவீனப்பட்டவர்களாக ஆக்கிக்கொள்வதற்கு பெற்றோரின் வளர்ப்பே காரணமாக அமைகிறது.

பெண்பிள்ளைகளை தனியே பாடசாலைக்கோ பிரத்தியேக வகுப்புகளுக்கோ அனுப்ப முடியல என்று சில பெற்றோர் அங்கலாய்த்துக்கொள்கின்றனர்.அதனால் தம் பெண் பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோரும் கூடவே சென்று காத்திருந்து கையுடன் கூட்டிக்கொண்டு வருவதனை தினமும் கண்ணாரக்காண்கிறோம்.

கலாசாரத்தை விடுத்து கலர்புல் பற்றியே யோசிப்பதனால் தான் இந்த நிலைமை.உங்கள் பெண் பிள்ளைகளுக்கு குதிரையேற்றத்தை கற்றுக்கொடுக்காவிடினும் தற்காப்புக் கலை தான் தெரியாவிடினும் குறந்தது பிரச்சினையை எதிர் கொள்ளும் பக்குவத்தையும் தைரியத்தையும்  துணிச்சலையும் ஊட்டி வளருங்கள்.

கொழும்பு வாழ் பெற்றோர்களே மேற் சொன்ன விடயத்தில் பெரிதும் உள்ளடக்கப்படுகின்றனர்.மாணவிகள்  கல்வியில் அதிகம் அக்கறை காட்டுகின்றனர் என்பதற்கு அண்மையில் வெளியான க.பொ.த.சா/தர பெறுபேறுகள் சான்று பகர்கின்றன.ஆனால் உயர் தரம் கற்று பல்கலைக்கழகம் செல்வோரின் தொகை கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை மிகக் குறைவு.அதற்கான பல காரணங்களில் பிரதான இடம் வகிப்பது பாடசாலைக்கு தனியாக அனுப்ப முடியாதிருப்பதும் பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுப்ப முடியாமையுமாகும் அவ்வாறு கல்வியைத் தொடர வேண்டுமெனில் பெற்றோரும் பிள்ளைகளின் பின்னால் அழைய வேண்டி இருப்பது என்பதாகும்.

கொழும்பு வாழ் பெற்றோர் இவ்விடயத்தில் அதிக சிரத்தை எடுப்பதுடன் நமது சமுதாயப் பெண்களின் எதிர்கால கல்வி வளர்ச்சி குறித்தும் ஆய்விட்குட்படுத்தி சரியான தீர்வு காணப்பட வேண்டும்.

கண்ணீருடன் "என்ன செய்ய படிக்க முடியல" என்று கூறும் மாணவிகளுக்கும் "என்ன செய்ய ஏன்ட பிள்ளைய படிக்க வைக்க ஆசதான் ஆனால் அவள கூட்டிட்டு போய் வாறத்துக்கு ஆள் இல்ல" என்று கூறும் பெற்றோருக்கும் விமோசனம் கிடைக்கப்பெற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரியட்டும்.

 ஷாமிலா செரீப்

No comments:

Post a Comment