Wednesday, March 29, 2017

வீணாச்சிப்பழக் கனவு - 01

முகநூல் எழுத்துக்கள்

முகநூல் எழுத்துக்களில் லைக் ,செயார் பின்னூட்டம் போன்றன குறித்து  ஆரோக்கியமான கலந்துரையாடலின் தேவையை முகநூல் எழுத்துக்கள் தோற்றுவித்துள்ளன.காலத்திற்கு ஏற்ற வண்ணம் தான் எழுத்தும் கருத்தும் அமைந்துவிட்டதனால் எழுத்திலிருந்த கலாசாரம் விழுமியம் போன்றன விடுபட்டு இல்லை பின்தள்ளப்பட்டு குழாயடிச்சண்டைகள் மிகச்சர்வசாதாரணமாக முகநூல் எழுத்துக்களை கட்டியாள்கிறது.

அச்சியந்திரத்தின் வருகைக்கு முன் எழுத்து பிரக்ஞை பூர்வமானது.காட்டாறு வெள்ளம் போல தான் சொல்ல வந்த விடயத்தை எந்தவித உள்குத்தும் இன்றி அழகிய முறையில் சொல்லிச்சென்றனர்.அச்சியந்திரத்தின் வருகையின் பின் நம்நாட்டினை பொருத்தவரை காலணித்துவ ஆட்சியின் தாக்கம் இருந்ததனால் எழுத்துக்கள் விடுதலை சுதந்திரம் சமத்துவம் போன்ற எண்ணக்கருக்களை யாரையும் சாடாமல் நேரடியாக வெளிப்படுத்தினர். போர்க்காலத்து இலக்கிய எழுத்து அச்சம்மிகுந்திருந்த அதேவேலை தமது எதிர்ப்பை பதிவு செய்யக்கூடியதாகவும் தமது இருப்பியலை  மிகத்தத்ரூபமாக வெளிக்காட்டக்கூடியதாவிருந்தது.

சமூக வலைத்தள எழுத்துக்களினூடாக பல்லாயிரக்கணக்கான எழுத்தாற்றல் மிக்கோர் வெளிக்கொணரப்பட்டுள்ளனர்.முன்பு ஒரு செய்தியையோ கதையையோ  பத்திரிகைக்கு அனுப்பி விட்டு பிரசுரமானதா?என இழவு காத்த கிளி போல இருந்த காலம் மாறி மனதில் என்ன நினைக்கிறோமோ அதனை எழுதும் சந்தர்ப்பத்தை முகநூல் ஏற்படுத்திக்கொடுத்தது.நல்லவகையான எழுத்துகளின் பெருவாரியான தோற்றம் பலரையும் வாசகர்களாக மாற்றியது.அதே போன்று
ஒரு பிரச்சனையை பதிவு செய்யும் பொழுதும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் போதும் தான் கொண்ட நிலைப்பாட்டினை குரோதம் நிறைந்த எழுத்துக்களால் வெளிப்படுத்துதல் என்ற நிலையினை முகநூல் எழுத்துக்கள் தோற்றுவித்துள்ளன.விழுமியம் புறக்கணிக்கப்பட்டு குரோதம் தலைவிரித்தாடுவதனால் முகநூல் எழுத்தாளர்கள் ஆன்மீகப்பயிற்சியற்றவர்களோ என்ற சந்தேகத்தினை உருவாக்கும் விதமான எழுத்துக்கள் வாசிக்க கிடைக்கவும் செய்கின்றன.

சங்க காலத்தில் காதலி பெயர் கூறி இன்புறும் ஒரு தலைக்காமம் போன்று தற்கால முகநூல் எழுத்துக்கள் தனக்கு விருப்பமானதை இன்னொருவரும் ஏற்றுக்கொண்டார் என்ற பொருந்தாக்காமத்தினை வலிந்து கூறி முன்வைக்கிறது.காழ்புணர்ச்சி தலைக்கேறிவிட்டதன் வெளிப்பாடு இலக்கியங்களை குறியீடு, படிமம்,கரு போன்றன இன்றி வெளிவருகிறது.

Tuesday, March 21, 2017

விமர்சனங்களூடே...

அவளை விமர்சிப்பதாக
இவள் சொன்னாள்
அவர்கள்
இலக்கிய விமர்சகரல்ல
ஆய்வாளர்களல்ல
அயலவர்களுமல்ல
இவளைப்பற்றி அவனிடமும்
இவனைப்பற்றி அவளிடமும்
அந்த அறையிலிருந்த
வண்ணம் கதைப்பவர்கள்
கல்வி புகட்டுவதை
தொழிலாய்க்கொண்டவர்கள்

காலக்கொடுமை
அவர்களால் போதிக்கப்படும்
எதிர்கால கல்விச்சமூகம்
இம்மையில்
மனிதர்களால்
கேள்விக்குட்படுத்தப்படும்
மறுமையில்
இறைவனிடம் பதிலளிப்பார்கள்

இவள்
கற்களை கொத்திப்பிரட்டி
சமப்படுத்தியும்
முட்களை அகற்றியும்
பாதைகளை
செப்பனிடுகிறாள்
குழிகளை நிரப்ப அதிகநாட்கள் எடுக்கும்
ஆனாலும் அவள் பாதை அழகானது
நித்தியமானது
யாரும் தடுமாறியேனும் விழமாட்டார்கள்..
அதுவரை விமர்சனங்களூடே பயணித்துக்கொண்டிருப்பாள்

Sunday, March 19, 2017

இடிபாடுகளுக்குள் சிக்குண்ட கவிதை- 07

வாசிக்கப்படாத கவிதையிடம்
வாசிக்கப்படாத புத்தகங்கள்
அதிகரித்து விட்டன
யார் யாரோ தந்து விட்டுப்போனதும்
தினித்துவிட்டுப்போனதும்
அடுக்கப்படவில்லை

அடுக்கியிருப்பதெல்லாம் வாசிக்கப்பட வேண்டியவை
புரிதலுக்கும்
விட்டுக்கொடுப்பிற்கும் இடையே
இந்தக் கவிதைப்புத்தகத்தை
செருகிவிட்டுச் சென்றார்கள்

அவன் வாசிக்க மறந்த நாவல்
மேசை மீது நீண்டநாட்கள்
விரித்துக்கிடக்கையில்
இடைச்செருகல் எவ்விதம் கண்ணில்படும்??
அவனுக்கு பிடித்ததெல்லாம்
அமானுஷ்யம் மட்டுமே

Saturday, March 11, 2017

கவிதை எழுத்து

பெண்ணுட லையும் மூடியிருக்கும்  முலைகளையும் யோனியையும் அதன்
உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துதல் கவிதை வியாபாரம் எனில்
கடையை சீல் வைத்து மூடவே விரும்புகிறேன்

பாவம் அவர்கள் பேசப்படவேண்டியவர்கள்
என்னையும் என்னாடையையும் விமர்சிப்பவர்களுக்கு
நான்
ஒருபாட்டுடையாள்
கம்பனும் ஒரே ஒரு பாடலில் தான் சத்துருக்கனை பாடினான்
ஆயிரம் பாடல்களில் பாடப்பட்ட இராவணனை மாற்றுக்கருத்துடையோர் கொண்டாடுவதை தவிர்க்வியலாது
கவிதை உலகிற்கு மறைத்தலே சிறந்தது

மௌனத்தை கலைத்து
விரதத்தை உடைத்து
சமயத்தை அடகுவைத்து
சாக்கடைகளை எழுத்தில் கொண்டுவரவேண்டிய தேவையை ஒருக்காலும் உணரப்போவதில்லை
ஒழுக்கமற்ற எழுத்துக்களை யார்தான் விருப்போகின்றனர்?விரும்புபவர் குறித்தும் கவலையில்லை
மருந்து குடித்தால் குணமாகிடும் வருத்தமல்லவே எழுத்து.

இடிபாடுகளுக்குள் சிக்குண்ட கவிதை-06


இருண்ட வானம்
கருக்கொண்ட மேகம்
வரண்ட மனிதம்
வழிநெடுகிலும்

உடைந்த குடை
நனைந்த உடை
குட்டைப்பாவாடை
அடை மழை
ஆமர்வீதியில்

இடிமின்னலில்
அவள் வயிற்றுப்பசி வெளிப்பட்டுத்தெறிக்கிறது
தினமும் பயணிக்கும் வீதியில்
முன்னொருபோதும் கண்டிராத
அந்தப்புதுமுகம்
என்னுள் பல கனைகளை தொடுத்திற்று..

பட்டினிக்கு
பெண்ணுடல் தான் தீர்வென நினைத்துவிட்டிருத்தாள்
குழந்தை விரல்களை நீட்டி
ஆன்ரி...என்கிறான்
மீண்டும்
அன்ரி பாவம் மா..
ஓம் மகன் அன்ரி பாவம்