Wednesday, March 29, 2017

வீணாச்சிப்பழக் கனவு - 01

முகநூல் எழுத்துக்கள்

முகநூல் எழுத்துக்களில் லைக் ,செயார் பின்னூட்டம் போன்றன குறித்து  ஆரோக்கியமான கலந்துரையாடலின் தேவையை முகநூல் எழுத்துக்கள் தோற்றுவித்துள்ளன.காலத்திற்கு ஏற்ற வண்ணம் தான் எழுத்தும் கருத்தும் அமைந்துவிட்டதனால் எழுத்திலிருந்த கலாசாரம் விழுமியம் போன்றன விடுபட்டு இல்லை பின்தள்ளப்பட்டு குழாயடிச்சண்டைகள் மிகச்சர்வசாதாரணமாக முகநூல் எழுத்துக்களை கட்டியாள்கிறது.

அச்சியந்திரத்தின் வருகைக்கு முன் எழுத்து பிரக்ஞை பூர்வமானது.காட்டாறு வெள்ளம் போல தான் சொல்ல வந்த விடயத்தை எந்தவித உள்குத்தும் இன்றி அழகிய முறையில் சொல்லிச்சென்றனர்.அச்சியந்திரத்தின் வருகையின் பின் நம்நாட்டினை பொருத்தவரை காலணித்துவ ஆட்சியின் தாக்கம் இருந்ததனால் எழுத்துக்கள் விடுதலை சுதந்திரம் சமத்துவம் போன்ற எண்ணக்கருக்களை யாரையும் சாடாமல் நேரடியாக வெளிப்படுத்தினர். போர்க்காலத்து இலக்கிய எழுத்து அச்சம்மிகுந்திருந்த அதேவேலை தமது எதிர்ப்பை பதிவு செய்யக்கூடியதாகவும் தமது இருப்பியலை  மிகத்தத்ரூபமாக வெளிக்காட்டக்கூடியதாவிருந்தது.

சமூக வலைத்தள எழுத்துக்களினூடாக பல்லாயிரக்கணக்கான எழுத்தாற்றல் மிக்கோர் வெளிக்கொணரப்பட்டுள்ளனர்.முன்பு ஒரு செய்தியையோ கதையையோ  பத்திரிகைக்கு அனுப்பி விட்டு பிரசுரமானதா?என இழவு காத்த கிளி போல இருந்த காலம் மாறி மனதில் என்ன நினைக்கிறோமோ அதனை எழுதும் சந்தர்ப்பத்தை முகநூல் ஏற்படுத்திக்கொடுத்தது.நல்லவகையான எழுத்துகளின் பெருவாரியான தோற்றம் பலரையும் வாசகர்களாக மாற்றியது.அதே போன்று
ஒரு பிரச்சனையை பதிவு செய்யும் பொழுதும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் போதும் தான் கொண்ட நிலைப்பாட்டினை குரோதம் நிறைந்த எழுத்துக்களால் வெளிப்படுத்துதல் என்ற நிலையினை முகநூல் எழுத்துக்கள் தோற்றுவித்துள்ளன.விழுமியம் புறக்கணிக்கப்பட்டு குரோதம் தலைவிரித்தாடுவதனால் முகநூல் எழுத்தாளர்கள் ஆன்மீகப்பயிற்சியற்றவர்களோ என்ற சந்தேகத்தினை உருவாக்கும் விதமான எழுத்துக்கள் வாசிக்க கிடைக்கவும் செய்கின்றன.

சங்க காலத்தில் காதலி பெயர் கூறி இன்புறும் ஒரு தலைக்காமம் போன்று தற்கால முகநூல் எழுத்துக்கள் தனக்கு விருப்பமானதை இன்னொருவரும் ஏற்றுக்கொண்டார் என்ற பொருந்தாக்காமத்தினை வலிந்து கூறி முன்வைக்கிறது.காழ்புணர்ச்சி தலைக்கேறிவிட்டதன் வெளிப்பாடு இலக்கியங்களை குறியீடு, படிமம்,கரு போன்றன இன்றி வெளிவருகிறது.

No comments:

Post a Comment