Friday, October 13, 2017

பிரியாணி - சிறுகதை

நீண்ட நாட்களுக்குப்பிறகு அவள் வந்திருப்பதால் ஆர்வத்துடன் சமையலில் ஈடுபட்டேன் என்னுடைய சகோதரி வந்திருப்பதான உணர்வு.மகன் உமர் காலித்திற்கு  அவள் மீதான ஈர்ப்பு இதுல தான் என்று சொல்ல முடியாதவாறு ஏதோ ஒர் இறுக்கம். வழமையாகவே யாரும் வீட்டுக்கு வந்தால் என்னுடன் ஒட்டிக்கொண்டே இருப்பான்.சமைப்பதற்கு விடமாட்டான் "தூக்கு மா ..பபாவ தூக்குமா" என்பான்.நானும் அவரை அழைத்து "குழந்தையை வைத்திருந்தால் தான் சாப்பாடு இல்லாட்டி கடையில் வாங்கி கொடுப்போம்" என்பேன்.  வந்திருப்பவர்களுடன் பேசவோ கிட்ட போகவோ மாட்டான்.ஆனால் வழக்கத்துக்கு மாறாக அன்று அவன் என் கிட்ட வரவே இல்ல.
"வாணி வாணி "என பல முறை சொல்லியவாறு ஹாலில் விளையாடிக்கொண்டிருந்தான்..
எல்லோரரையும் அன்டி"என அழைக்கும் குழந்தை அவளை பெயர் சொல்லியே அழைப்பான்.அது அவளுக்கும் பிடித்திருந்தது."மகன் அன்டி என்று சொல்லுங்க" என்ற போது "விடுங்க அவன் சொல்லட்டும் பெயர் வைக்கிறது கூப்பிடத்தானே" என்றாள்.அது அவளுக்கும் பிடித்திருந்தது என்பதனை நான் உணர்ந்து கொண்டேன்.  அவள் மீது தனிப்பிரியம் குழந்தைக்கு இருக்க காரணம் அவளின் அன்பான நடத்தைகள் தான்.பொதுவாக குழந்தைகள் அவ்வளவு சீக்கரத்தில் எல்லோரிடமும் பழகுவதில்லை.அவர்களுக்கு பிடித்திருந்தால் மாத்திரம் தான் முகத்தை பார்க்கவே செய்வார்கள்.அதற்கு குழந்தை உமர் காலித்தும் விதிவிலக்கல்ல. அவள் முதல் தடவையாக வீட்டிற்கு வந்திருந்த போது சிதறிக்கிடந்த புத்தகங்களை அடுக்கி குழந்தையின் கைகளாலே அவற்றை புத்தக ராக்கையில் அடுக்கவும் செய்திருந்தாள்.அது அவனுக்கு மிகுந்த சந்தோசத்தை அளித்திருக்க வேண்டும். தினமும் புத்தகங்களை ராக்கையிலிருந்து கீழே இழுத்துப்போடுவான் உமர்.நானும் அவன் தூங்கிய பிறகு அழகாய் அடுக்கி வைப்பேன்.திரும்பவும் இழுத்து வீசுவான் நானும் அடுக்கி வைப்பேன்.வாணி குழந்தையிடம் புத்தகங்களை கொடுத்து அடுக்கச் செய்த போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது."இந்த வேலய நாம இதுவரை செய்யலயே"என மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.அவள் செயற்பாடுகள் குழந்தையைக் கவர்ந்தது போல் என்னையும் ஈர்த்திருந்தது. அவள் மீதான பிடிப்பின் வெளிப்பாடு அன்றே அவளருகில் போய் இருந்து கொண்டான்.அதன் பிறகு வட்சப் இல் அவளை அழத்து குரல் அனுப்பியிருந்தான்.அதற்கு அவள் அனுப்பிய பதிலை எத்தனையோ முறை மீண்டும் மீண்டும் கேட்டான்.. பொதுவாக பெண்ணின் வசீகரமான இனிமையான குரல் ஆண்களைக் கவர்வது சாதாரணமானதுதான்.ஆனால் குழந்தைக்கு அவள் குரலில் இருந்த அன்பு கனிவு  ஈர்ப்புக்கு காரணமாயிற்று.

முதல் சந்திப்பிலேயே "நான் நல்லா பிரியாணி செய்வேன்"என்றது மாத்திரமல்லாது வீட்டவந்து செய்து தருவதாகவும் உத்தரவாதமளித்தாள்.அவள் வீட்டுக்கு வரும் அன்றைய தினம் பிரியாணி சமைப்பதற்கு தேவையான அனைத்துப்பொருட்களையும் வாங்கி வைத்தேன்.மிகுதிப்பொருட்களை தானே வாங்கி வருவதாக கூறியிருந்தாள்.உண்மையிலே இவளுக்கு பிரியாணி செய்யத்தெரிந்திருக்குமா என்ற சந்தேகம் எனக்கும் கணவருக்கும் இருந்தது.இது தொடர்பில் இருவரும் உரையாடிக்கொண்டோம்.ஏனெனில் திருமணமான பின்னர் தனிக்குடித்தனம் நடாத்தும் பெண்களுக்கு சமைக்கத்  தெரிந்திருக்கும் என்பது பொதுவான அபிப்பிராயம்.ஆனால் அம்மாவுடன் கூட்டுக்குடும்பத்தில் இருக்கும் வாணிக்கு சமைக்கத்தெரிந்திருக்குமோ? என சந்தேகப்படுவதில் நியாயம் இருக்கத்தான் செய்தது.அத்துடன் நீரை கொதிக்க வைக்கவும் அவித்த முட்டையை உரிக்கவும் தக்காளி வெட்டவும் தெரியும் எனும் பெண்களிடையே பிரியாணி சமைக்கவும் முடியுமென்றால் ஆச்சரியப்படுவதில் தப்பில்லை.

யாருடனும் பழகிப்பார்க்காமல் தம் விருப்பத்திற்கு கட்டுகதையை பறக்கவிடுட்டு அதில் இன்புறும் மனநிலையானது முன்பு ஊடகவியலாளர்களிடம் காணப்பட்ட பறவைக்காய்ச்சல் இப்போ இலக்கியவாதிகளுக்கும் தொற்றியிருந்தது.அந்தப்பறவைக்காய்ச்சல் பிடித்த நபர் ஒருவர் அவள் குறித்த பிழையான பிம்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்திருந்தார் அதன் வெளிப்பாடுதான் அவளைப்பற்றிய பரப்புரைகள்.

நான் பழகும் நண்பிகளின் இறந்த காலம் நிகழ் காலம் எதிர்காலம் குறித்த தேடல்கள் ஒரு போதும் என்னிடமிருந்ததிலை.ஆனால் எத்தனையோ ஆண்கள் பெண்களின் மீது அக்கறை கொண்டு விசாரிப்பதுண்டு.ஒரு முறை வீட்டுக்கு வந்த விருந்தாளி அடுக்கடுக்கான எரிச்சல் தரும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்.பொதுவாக அவள் என்று விசாரிப்பதானது உள்ளூர கோபத்தினை ஏற்படுத்தவல்லது. "அவள் சஹானா கல்யாணம் முடிச்சவள் தானே?இப்ப பிரிஞ்சிட்டாளோ?"
"தெரியாது"
"ஏன் நீங்க கேட்பதில்லையா?"
"எனக்கு தேவல்லாத கேள்வி அது எனவே கேட்பதில்லை"
"உங்கட நல்ல பிரண்டோடதானே சுத்திக்கிட்டிருக்காள்"
"..............."
"அன்டைக்கு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவங்க எல்லாரும் அவள்ட கதயத்தான் கதைச்சாக"
"..............."
"நான் கேட்ட கேள்விக்கு பதிலே இல்ல"

இதுவரை எரிச்ச லுடன் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த எனக்கு அவருக்கு ஒரு வார்த்தையில் பதில் அளித்து அந்த இடத்தை விட்டகல வேண்டும் என்று தோன்றினாலும்  வீட்டுக்கு வந்த விருந்தாளி என்ற இங்கிதத்துடன் பதிலளிக்கலானேன் "பி.எச்.டி க்கு தகவல் தேடுறீங்களோ இல்லையோ பொம்பளயல்ற பலாய் மட்டும் நல்லா தேடுறீங்கன்டு விளங்குது " என்று சிரித்து தொடர்ந்தேன் " நானா நீங்க இத மாதிரி ஏற்கனவே சாஹிராவ பத்தியும் அவள்ட கல்யாண வாழ்வ பற்றியும் கேட்டிங்க.இப்ப யாரோடும் தொடர்பா?என்டும் கேட்டீங்க.ஆனால் நீங்க விசாரித்த இவங்க இரண்டு பேரும் நல்ல எழுத்தாளர்கள்.அவங்கட புத்தகத்த வாசிச்சிட்டு அதிலுள்ள விடயங்கள கூட கலந்துரையாடலாம்.நான் கூட அவர்கள்ட எழுத்து குறித்து நிறைய பேசுவன்."இவ்விதம் நான் சொல்லிட்டு இருக்கும் போதே அவர் "இதென்னடா வாப்பா பெரிய வம்பா போச்சு உங்கட பிரன்ட் தானே தெரிஞ்சிருக்கும் என்டு கேட்டன்"
"சரி இத தெரிஞ்சு கொண்டு என்ன செய்யப்போறிங்க?உங்களுக்கு ஏதும் பிரயோசனம் இருக்கா?அவ யார கலியாணம் முடிச்சா நமக்கென்ன வந்தது?நான் தனிப்பட்ட கதைகள விசாரிப்பதில்ல.." என்று அடக்கியிருந்த கோபத்தை சற்று உயர்ந்த தொணியிலே வெளிப்படுத்தினேன்.இன்னும் நிறைய பேசத்தோனிற்று.ஆனாலும்
அந்த நேரமாக பார்த்து கணவர் வரவும் தேநீர் ஊற்றலாம் என குசினிப்பக்கம் நழுவி விட்டேன்.

இன்றைக்கு பலர் யாரென்றே தெரியாத பெண்களின் தனிப்பட்ட விடயங்களை தேடிய லைந்து அதனை சர்வதேச அரசியல் பிரச்சனையை  அலசுவது போன்றும் பிரபலமான பெண்களின் முகநூல் பக்கங்களை வாசித்து அவர்களின் நாளாந்த பதிவுகளை வாசித்துக்கொண்டு அதனைப்பற்றி வம்பளப்பதனையும் வாடிக்கையாக்கிருக்கின்றனர்.இந்த விதத்தில் தான் வாணியைப்பற்றிய கதைகளையும் காற்றிலையவிட்டிருந்தனர்.ஆனால் அவளின் நாளாந்த நடவடிக்கையில் மயிரசைவேனும் தெரியாது தமது விருப்பத்திற்கு கதைப்பவர்கள் குறித்து எனக்கு  சிரிப்பு தான் வரும்.நம்மட சோனிக்காக்காமாருக்கு யாராவது பிரபலமான பெண்களை பற்றி ஊருபலாய் கழுவாட்டி தூக்கமே வராது.அப்படி பட்ட இரு எலக்கியவாதிகள் என்னிடம் அவள் பற்றி விசாரிக்கும் போது ஒங்கியறைந்திடத்தான் தோன்றியது .

இஸ்லாமிய வரலாற்றை பார்க்கும் போது ஒரு முறை உமர் (ரலி) அவர்களிடம் ஒருவர் பற்றி கூடாத விடயங்களை கூறிய சஹாபியிடம் உமர் ரலி அவர்கள் கேட்டார்கள் "நீ அவருடன் கொடுக்கல் வாங்கல் செய்திருக்கிறாயா?"
"இல்லை" என பதிலளித்தார் பின்னர்  "அவருடன் பிரயாணம் செய்து ஒன்றாக தங்கி ஒன்றாக சாப்பிட்டு நாட்களை கழித்திருக்கிறாயா?
" இல்லை"
"நீ அவருடைய அண்டை வீட்டுக்காரனா? "
"இல்லை"
"இப்படி எதுவும் இல்லை என்றால் நீ சொல்ற விடயம் பொய்.என்னிடம் அடி வாங்காமல் ஓடி விடு"என்று உமர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.இத்தகைய அழகிய வழிகாட்டலை கொண்ட இஸ்லாம் மார்க்கத்தில் பெண்கள் குறித்த சில ஆண்களின் கேள்விகள் அடிக்கடி என்னை ஆத்திரமூட்டவே செய்கின்றன.

ஒவ்வொரு பெண்ணுக்கும் தனிப்பட்ட பண்புகள் விருப்பு வெறுப்புக்கள் என்று வேறுப்பட்ட இயல்புகள் இருக்கவே செய்கின்றன.அப்படி தான் வாணியும் அவளுக்கே உரித்தான பாணியில் பழகுவாள்.அது குழந்தை உமர் காலித்திடம் அதிக தாக்கம் செலுத்தியிருந்தது."வாணி பார்க்க போவமா?" என்று வினவுவான்.ஏதோ தியட்டரில் படம் பார்க்க போவமா என்று கேட்பது போல வாணி பார்க்க போவமா எனக்கேட்கும் போது அவனை அள்ளி அனைத்துக் கொஞ்சி "இல்ல போறல்ல"என்று சொன்னால் "போவமே அபி வா மாணி பாக்க போவம் "என்று கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு வந்திடுவான்.அவள் சென்ற முறை வந்து போனது குழந்தைக்கு பெரிதும் தாக்கமில்லை ஆனால் இம்முறை நீண்ட நாட்கள் பழகி விட்டாள் போகும் போது என்ன நடக்குமோ என பயந்து கொண்டிருந்தேன்.நல்ல வேளை அவள் விமான நிலையம் செல்லும் போது உமர் காலித் உறங்கிவிட்டிருந்தான்.

எனக்கு பிரியாணி என்றால் அலாதிப்பிரியம் முன்பு வாணி செய்த பிரியாணி இப்ப சாப்பிடனும் போலவே இருந்தது.நான் உண்டாகி இருப்பது தெரிந்தால் எனை எதுவும் செய்ய விடமாட்டாள்."அங்க போகாத இங்க போகாத என்ன பார்க்க வராத உடம்ப பார்த்துக்க நேரத்துக்கு சாப்பிடு" என்று ஆயிரத்தெட்டு ஆச்சி டிப்ஸ் சொல்வாள் அதனால் சந்தர்ப்பம் வரும் போது சொல்லிக்கலாம் என்டு இருந்திட்டன்.ஆனாலும் வாய் பிரியாணியை ருசி பார்க்கவே ஆசைப்பட்டது.இந்திய பிரியாணிக்கும் இலங்கைக் கடைகளில் கிடைக்கும் பிரியாணிக்கும் அதிக வேறுபாடுகள் உண்டு.கொழும்பிலுள்ள கடைகளில் கணவர் பிரியாணி வாங்கி வந்தால் இருவருக்கிடையில் முரண்பாடு தோன்றும்.காரமும் எண்ணெய்யும் அதிகமாக இருக்கும்.மஞ்ச கலரிலும் சிவப்பு கலரிலும் சாயம் உபயோகித்திருப்பார்கள்.
"ஊத்த கலரில் இருந்தா மாத்திரம் பிரியாணி வாங்குங்க" என்பேன் ஒரு முறை பம்பலப்பிட்டியில் சாப்பிட்ட நினைவு அதன் பிறகு அந்த டேஸ்டில் எங்கும் கிடைக்கல. நான் இந்தியாவின் எந்த பிரதேசத்திற்கு சென்றாலும் சாப்பிட நினைப்பது பிரியாணி தான்.கொழும்பிலுள்ள இந்தியன் ரெஸ்டொரன்ட்களில் சாப்பிட்டாலும் அந்த ருசி வருவது கிடையாது.அதன் அசல் டேஸ்டில் வாணி சென்ற முறை வந்த போது செய்த பிரியாணி அமைந்திருந்தது.இந்த நேரத்தில என்ன சாப்பிட பிடிக்குமோ அதனையே எல்லோரும் கொடுப்பர் ஆனா அதனை சொல்லாமலே அவளிடம் கேட்டேன்
"பிரியாணி செய்து தாறிங்களா?"
"அடுத்த முறை வரும் போது கட்டாயம் செய்து தாறேன்டா" என்றவளிடம் எதுவும் சொல்ல முடியாதவளானேன்.

முற்றும்-
12-05-2017

No comments:

Post a Comment