Wednesday, October 11, 2017

-பொம்புள- பத்தி -02

பெற்றோர் தன்னுடன் இருக்கும் அவளுடைய திருமண புகைப்படத்தை முகநூலில் பிரசுரித்திருந்தாள்.அவளை ஆஹா அழகு அற்புதம் என்றெல்லாம் கூறி பின்னூட்டம் வரவேண்டும் என்பதல்ல அவளது எதிர்பார்ப்பு. இணை பிரியாத காதலால் அடுத்தடுத்து மரணித்துவிட்ட தன் பெற்றோர் தன்னுடன் இருப்பதான உணர்வினை ஏற்படுத்தும் வண்ணம் அந்த படத்தை தன் புரபைல் பிக்சராக போட்டிருக்கலாம் எனக் கருதுகிறேன்.

அங்கு இடப்பட்டிருந்த பின்னூட்டம் என்னை நகைப்புக்குள்ளாக்கியது."ரிமூவ் பண்ணவும்"  இந்த பின்னூட்டம் குறித்து சிந்திக்கலானேன்.அவளுக்கு பிடித்திருக்கு அதனால் அவள் பிரசுரித்திருக்கிறாள் இதில் அடுத்தவருக்கு என்ன மன உளைச்சல்? சரி நண்பர் அல்லது நலன் விரும்பி என்று எடுத்துக்கொள்வோம்.அப்படி தான் இருந்தாலும்  நல்ல சுயசிந்தனை உள்ள படித்த பெண் அவ்வாறு ஒரு படத்தினை பிரசுரிக்கும் பொழுது இது குறித்து அவள் தானே சிந்திக்க வேண்டும் இல்லையெனில் அவளுடன் முகநூலில் நட்பு பட்டியலில் இருக்கும் தம்பியோ கணவனோ இது குறித்து   பேசலாம்.ஆனால் பொம்புள என்றவுடன் சாரன மடிச்சிக்கட்டும் சகோதர பாசமும் டிசைனும் இன்னும் தான் புரியல. அவளுக்கு வந்த அறிவுரைகள் நிமித்தம் அந்த புரபைல் பிக்சர் பின் நீக்கப்பட்டது.

ஆண்களின் அவ்ரத் தொப்புள் முதல் முட்டங்கால் வரையானது எனின் வெறும் உள்ளாடையான அந்த சட்டியுடன் நீச்சலடித்து படம் பிரசுரித்துள்ள ஆண்கள் குறித்து ஒரு கனம் சிந்திக்க எனக்கு அவசியமில்லை.அந்த படத்தின் கீழ் பின்னூட்டம் வழங்கியுள்ள மச்சான்மார்கள் தான் கவலைப்படனும்

" மச்சி சூப்பர்டா"
"எங்கடா இது?சூப்பர்டா மச்சான் "
"என்ஜோய்டா மச்சி"

இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய போதனைகள் எங்குள்ளது?சரீஆ சட்டம் வெறும் பெண்ணுக்கானதா??இந்த கேள்விகள் வீசப்பட வேண்டியது அந்த பின்னூட்டம் வழங்கிய மச்சான்மார்கள் மீது தான் என்பது உறுதி.

ரஜனி நடித்து வெளியான கபாலி திரைப்படம் இலங்கையின் பல தியேட்டர்களிலும் திரையிடப்பட்டிருந்த நேரமது.முகநூலில் ஒரு புகைப்படத்தை போட்டு அந்த படத்தை நம் சோனிகாக்காக்கள் பின்னூட்டங்களால் பென்ட் எடுத்துக்கொண்டிருந்தனர்.அப்படி என்ன போட்டோ அது எனப்பார்த்தால் நான்கு பெண்கள் தியேட்டர் வாசலில் எடுத்துக்கொண்ட போட்டோ.பின்னூட்டங்கள் பலவாறு அமைந்திருந்தன

"மறுமையைப் பயந்து கொள்ளுங்கள் சகோரிகளே"
"நரக நெருப்பு "
"அல்லாஹ் தான் உங்களுக்கு நேர்வழி காட்டனும்"

இத்தனைக்கும் பின்னூட்டம் வழங்கியிருந்த நம் மேலான சகோதரர்கள் அனைவரும் தியேட்டர் சென்று வரிசையில் நீண்ட நேரம் நின்று கபாலி படத்தை பார்த்து ரசித்தவர்கள் தான்.(ஒரே நாளில் பல தியேட்டர்களில் நம் காக்காமார்களை எடுத்த போட்டோக்கள் உள்ளன)

என்னைப்பொருத்த வரை இஸ்லாம் அழகான மார்க்கம்.அல்குர் ஆன் அற்புத வழிகாட்டி. நபிகளாரின் சொல் செயல் அங்கீகாரம் அனைத்தும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பளிக்கின்றன.பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வண்ணம் இறங்கப்பட்ட அந்-நிஷா இன்னும் இன்னும் பெண்களுக்கு மகத்துவமளிக்கிறது.இதனை விட வேறு என்ன தேவை?
நான் பெண்
மகத்துவமானவள்

இஸ்லாத்தின் மீதான வெறுப்பை கட்டமைத்து விட்டிருப்பவர்கள் மேற்சொன்ன மச்சான் மார்களும் சரிஆ சட்டங்களை பிரயோகிப்பவர்களும் தான்.நம் நாட்டில் முஸ்லிம் பெண்கள் மீது மட்டுமே சட்டங்களை திணித்து திணித்து ஆண்களுக்கு இஸ்லாம் மார்க்கம் இல்லை எனுமளவுக்கு காலம் வேகமாகபோய்க்கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment